
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம், நட்பு அடிப்படையில்தான் ஏற்படுத்தப்பட்டது. எங்கே இருக்கிறது நல்லெண்ணம்? என்று, பாகிஸ்தானுக்கு இந்தியா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. நேற்று பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து நடந்த தாக்குதலுக்குப் பின்னர் விளக்கம் அளித்தது போல், இன்று காலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் குறித்து விளக்கம் அளித்தார், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி. அப்போது அவர் பாகிஸ்தான் குறித்து சரமாரியாக சில கேள்விகளை எழுப்பினார்.
வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “ஐ.நா. பாதுகாப்பு சபையில் பஹல்காம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் டி.ஆர்.எஃப் (தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்) இன் பங்கை எதிர்த்தது. இந்தத் தாக்குதலுக்கு டி.ஆர்.எஃப் ஒரு முறை அல்ல, இரண்டு முறை பொறுப்பேற்ற பிறகு இது நடந்தது… இந்தியாவின் பதில் தீவிரமடையாதது, துல்லியமானது மற்றும் அளவிடப்பட்டது” என்று நேற்றும் இன்றும் கர்னல் குரேஷியும் விங் கமாண்டர் சிங்கும் தெளிவாகக் கூறினர். “எங்கள் நோக்கம் விஷயங்களை மேலும் தீவிரப்படுத்துவது அல்ல, மேலும் தீவிரப்படுதலுக்கு மட்டுமே நாங்கள் பதிலளிப்போம். எந்த இராணுவ இலக்குகளும் குறிவைக்கப்படவில்லை; பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பு மட்டுமே தாக்கப்பட்டுள்ளது.” என்று தெளிவாகக் கூறினார்கள்.

இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் எழுப்பிய கேள்விகளும் விளக்கங்களும்…
போர்கள் நடந்தபோதும், 60 ஆண்டுக்கும் மேலாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மதித்து செயல்படுத்தியது. ஆனால் பாகிஸ்தான் வேண்டும் என்றே பல இடையூறுகளை இந்தியாவுக்கு செய்தது.
மேற்கு நோக்கி பாயும் நதிகளில் இந்தியாவுக்கு ஒப்பந்தப்படி இருக்கும் உரிமையை பயன்படுத்தி விட முடியாத வகையில் இடையூறுகளை செய்தது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம், நட்பு அடிப்படையில்தான் ஏற்படுத்தப்பட்டது. இது அந்த ஒப்பந்தத்தின் முன்னுரையில் கூட இருக்கிறது. அதை அவர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.
ஐ.நா., பாதுகாப்பு சபையில் முழு விவரங்களை இந்தியா வழங்கும். பாகிஸ்தான் சார்பில் நிறைய பொய்த்தகவல்களை பரப்புகின்றனர்.
ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் என்பது லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் ஒரு பினாமி அமைப்பு என்பதை உலகம் அறியும்.
ஒரு முறைக்கு இரண்டு முறை அந்த அமைப்பு, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நிலையில் தான் பின்வாங்கினர்.
சர்வதேச பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுத்ததை உலகம் அறியும். அந்நாட்டு அமைச்சர்களே அதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதல் குறித்த அனைத்து விவரங்களையும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா வழங்கும்.
பாகிஸ்தானை நம்ப முடியாது!
மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, குற்றவாளிகள், அவர்களை பாகிஸ்தானில் இருந்து இயக்கியவர்கள் பற்றிய அனைத்து விதமான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் ஒப்படைத்தோம். ஆனால், அந்த நாடு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இடையூறு தான் செய்தது. இனி மேல் பாகிஸ்தான் கூறுவதை எந்த விதத்திலும் நம்ப முடியாது.
இந்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு மரியாதை செலுத்துகிறது. ராணுவ அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர். தேசிய கொடியை போர்த்தியதை ‘கூட பார்க்க முடிந்தது. – என்று, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்





