
பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை இன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், திட்டங்கள் வெறும் பெயர்கள் அல்ல; புதிய பாலங்கள் காஷ்மீரின் புதிய அடையாளங்கள்; நாட்டின் புதிய சக்தியின் பிரகடனங்கள் புதிய பாலங்கள் சுற்றுலாவை அதிகரிப்பதுடன் பொருளாதாரத்தின் பிற துறைகளுக்கு பயன் தரும் என்று கூறினார்.
பிரதமர் மோடி இந்தப் பாலம் மற்றும் காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், காஷ்மீரின் வளர்ச்சிக்கு எது தடையாக இருக்கிறது என்பது குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறினார். மேலும் பயங்கரவாதத்தால் மனித குலம் எத்தகைய சிறப்பான வாழ்வை இழக்கிறது என்பதையும் எடுத்துக் கூறினார். அவர் பேசுகையில், “செனாப் மற்றும் அஞ்சி பாலங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தின் சக்தி வாய்ந்த சின்னங்கள். நமது இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.
“சுற்றுலாத் துறையில் பல்வேறு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, நமது அண்டை நாடு மனிதகுலத்திற்கு மட்டுமல்ல, சுற்றுலாவுக்கும் எதிராக செயல்படுகிறது. ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு எதிராக தீவிரமாக செயல்படும் ஒரு நாடு பாகிஸ்தான். இதற்கு ஏப்ரல் 22ம் தேதி பெஹல்காமில் நடந்த சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு. பெஹல்காம் சம்பவம் இந்தியாவில் கலவரங்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டது. அதனால்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
“பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காஷ்மீரிகளின் வருமானத்தைத் தடுக்க பாகிஸ்தான் செய்த சதி செயலாகும். செனாப், அஞ்சி பாலங்கள் காஷ்மீரில் செழிப்புகளை கொண்டு வரும். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயிலில் பயணம் தற்போது நிஜமாகிவிட்டது.
“மாதா வைஷ்ணவி தேவியின் ஆசிர்வாதத்துடன், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில் சேவை கொண்டு வரப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு முன்பு, செனாப் பாலம் மற்றும் அஞ்சி பாலத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று, ஜம்மு-காஷ்மீர் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களைப் பெற்றுள்ளது. ஜம்முவில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.
“ரூ.46,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்திற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்த புதிய வளர்ச்சிக்கு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பேசினார்.

முன்னதாக, ரயில் பாதையில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை கையால் முடிச்சுகளை அவிழ்த்து திறந்து வைத்தார். பொதுவாக ஒரு திறப்பு விழா என்றால் நீளமான ரிப்பன் கட்டப்பட்டிருக்கும். ஒரு தட்டில் ஒருவர் கத்தரிக்கோல் எடுத்து வருவார். அதனால் ரிப்பனை வெட்டி திறப்புவிழா நடக்கும். ஆனால் மோடி ஆட்சியில் எந்தத் திறப்பு விழாவிற்கும் ரிப்பன் கத்தரிக்கோல் கொண்டு வெட்டப்படுவதில்லை. மாறாக இரண்டு நீளமான துணிகள் நடுவில் முடிச்சுப் போடப்பட்டிருக்கும். பிரதமர் துணியை வீணாக்காமல் முடிச்சை மட்டும் அவிழ்த்து திறப்புவிழா நடத்துவார். அதாவது உள்ளே நுழையத் தடையாக இருக்கும் எதையும் வெட்டுவதில்லை, மாறாக அந்த முடிச்சுகளை அவிழ்த்து, தடைகளைத் தகர்த்து உள்ளே நுழைவது போன்ற மன உணர்வை ஏற்படுத்தி வருகிறார். அப்படித்தான் இங்கும் மிக நீளமான ரிப்பனைத் தன் கைகளால் பிடித்துத் தூக்கி முடிச்சுகளை அவிழ்த்து, தடைகள் பல கடந்து வந்துள்ள பாலத்தைத் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, “பிரதமர் அவர்களே… பலர் பிரிட்டிஷார் முதற்கொண்டு. காஷ்மீரை ஜம்முவுடன் ரயில்பாதை மூலம் இணைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால்.. அந்தக் கனவை நனவாக்கியது உங்களுடைய தலைமையிலான ஆட்சிக் காலத்தில்தான்” என்று பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, சீனாப் நதியின் மேல் 295 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள ஆர்ச் வடிவ ரயில் பாலக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.





