
பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை இன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தைத் திறந்து வைத்து, மக்களுக்கான நலத் திட்டப் பணிகளை அர்ப்பணிக்க இன்று காஷ்மீர் மாநிலத்துக்குச் சென்றார்.
முன்னதாக, அம்மாநிலத்தில் உள்ள பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்வதாக இருந்தது. ஆனால் அப்போது சில காரணங்களால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர், ஜம்மு காஷ்மீரில் தற்போது இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி காஷ்மீர் செல்ல திட்டமிடப்பட்டதன் அடிப்படையில் இன்று சென்றார்.
செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது பெரும் சாதனை. இரும்பால் கட்டப்பட்ட இந்தப் பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரயில்வே பாலம். நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
எதையும் தாங்கும் கம்பீரப் பாலத்தின் சிறப்புகள் :
செனாப் நதியின் குறுக்கே 359 மீ உயரத்தில் வளைவான அமைப்பில், இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம், 1,315 மீட்டர் நீளம் கொண்டது.
பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தைவிட 35 மீட்டர் அதிக உயரம் கொண்ட இப்பாலத்தின் சராசரி ஆயுள்காலம் 120 ஆண்டுகள்.
டெல்லியையும் காஷ்மீரையும் அருகருகே கொண்டு வருவதுபோல், 7 முதல் 8 மணி நேரப் பயண நேரத்தை வெறும் 3 மணி நேரமாகக் குறைக்கும் இந்த பாலம்.
மணிக்கு 266 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலும் இது தாக்குப் > பிடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஒருவேளை காற்றின் வேகமும், அடர்த்தியும் அதிகரித்திருந்தால், ஸ்டேசன் மாஸ்டருக்கு ரெட் சிக்னல் செல்லும் வகையில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. அச்சமயம், பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும்.
பாலத்தில் 780 மீட்டருக்கு பிளாஸ்ட் புரொடக்சன் ப்ளாட்ஃபார்ம் (BLAST PROTECTION PLATFORM) அமைக்கப்பட்டுள்ளது… இது ரயில் இயக்கப்படும்போது 40 டன் வெடிகுண்டு வெடித்தால்கூட பாலத்தில் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து, அப்சர்வ் செய்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..
பாலம் முழுக்க ஆங்காங்கே 120 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.. ஒரு சிறிய நடமாட்டம் கூட கண்காணிக்கும் வகையில் 150 சர்வர்களைக் கொண்ட கன்ட்ரோல் ரூம்கள் உருவாக்கப்பட்டுள்ளன..
மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் இதன் மீது ரயிலை இயக்கலாம்.. ஒரு வேளை ஒரு கரையின் இரும்புத்தூண் உடைந்து, சேதமானாலும்கூட… மறு கரையின் தூணுடைய சப்போர்டிலேயே மணிக்கு 30 கி.மீ., என ரயில் வேகத்தைக் குறைத்து இயக்கி பாலத்தைக் கடக்கும் வகையில் இந்த நெடுங்கனவு இன்று பல சவால்களைக் கடந்து சாத்தியமாகியிருக்கிறது…
பாலத்தைத் திறந்துவைத்து பயணித்த மோடி!
இந்தப் பாலத்தை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து கம்பி வழி ரயில் பாலமான அஞ்சி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் பகல் 12 மணியளவில் ஸ்ரீமாதா வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பின்னர் கத்ராவில் சுமார் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், அங்கே ஏற்கெனவே நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடக்கம்!
பிரதமர் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு நேற்றே தொடங்கி விட்டது. கத்ரா – ஸ்ரீநகர் இடையே தினமும் இரண்டு வந்தே பாரத் ரயில்களை பகல் நேரத்தில் 4 முறை இயக்க வடக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இருக்கை வசதி, எக்சிகியூட்டிவ் இருக்கை வசதி வந்தே பாரத் ரயிலில் உள்ளது. இருக்கை வசதிக்கு ரூ.715 என்றும், எக்சிகியூட்டிவ் இருக்கைக்கு ரூ.1,320 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் வந்தே பாரத் ரயில் (வண்டி எண் 26401) நாளை காலை 8.10க்கு கட்ராவில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் 11.08க்கு ஸ்ரீநகரை சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் ஸ்ரீநகரில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாலை 4.58க்கு கத்ராவை வந்தடைகிறது. பராமரிப்புப் பணிக்காக, வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் இந்த சேவை ரத்து செய்யப்படுகிறது.
மற்றொரு வந்தே பாரத் ரயில் (26403) தினமும் கத்ராவில் இருந்து மதியம் 2.55க்கு புறப்பட்டு மாலை 5.53க்கு ஸ்ரீநகரை அடைகிறது. பிறகு, மறுநாள் காலை ஸ்ரீநகரில் இருந்து காலை 8 மணிக்கு கத்ரா நோக்கிப் புறப்படுகிறது. பராமரிப்புப் பணிக்காக, இந்த ரயில் சேவை புதன்கிழமைகளில் ரத்து செய்யப்படுகிறது.
நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டது இந்த ரயில்கள். குறிப்பாக, பனி பொழியும் குளிர்ச்சியான பகுதி என்பதால், கடுங்குளிரில் தண்ணீர் மற்றும் பயோ-டாய்லெட்டுகள் உறைவதைத் தடுக்க, உறைபனி எதிர்ப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வந்தே பாரத் ரயில்களில் மிதவெப்ப சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால், வெளியே கடுங்குளிர் இருந்தாலும், ரயிலின் உள்ளே வெதுவெதுப்பாக இருக்கும்.
இந்த ரயில் வழித்தடத்தில்தான் கீர் பவானி கோவில், மார்தாண்ட சூரிய கோவில் மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான பகுதிகளும் வருவதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்கிறது வடக்கு ரயில்வே. அதற்கேற்ப, இந்த இரு வந்தே பாரத் ரயில்களிலும் சனிக்கிழமை நாளைய பயணத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. தொடர்ந்து வரும் நாட்களுக்கும் குறைவான டிக்கெட்டுகளே உள்ளன.
இந்த இரு ரயில்களும் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தில் 1,315 மீட்டர் தொலைவு பயணிக்கும். இந்த ரயில்கள் 100 கி.மீ. வேகத்தில் செல்லும் வசதி கொண்டவை என்பதால் மலைகளுக்கு இடையே பறப்பது போன்ற உணர்வைப் பயணிகள் பெறலாம் என்கிறது வடக்கு ரயில்வே.





