
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மேற்கொண்ட பயணத்தை முடித்துக் கொண்டு, இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக கடலில் தரையிறங்கினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா குழுவினர் இன்று, பத்திரமாக பூமிக்குத் திரும்பினர். 22 மணி நேர பயணத்திற்குப் பின், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் இன்று மாலை 3 மணிக்கு, ‘ஸ்ப்லாஷ் டவுன்’ முறையில் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது. அதை அடுத்து, சுக்லா உள்ளிட்டோர் வெளியே அழைத்து வரப்பட்டனர். சுபான்ஷூ சுக்லாவுக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ ஆகியவை இணைந்து அமெரிக்காவின் ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டது. இத்திட்டத்தின்படி, இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25ம் தேதி, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின், ‘பால்கன் 9’ ராக்கெட் வாயிலாக பூமியில் இருந்து புறப்பட்டனர். அவர்களைச் சுமந்து சென்ற ‘டிராகன்’ விண்கலம், 28 மணி நேர பயணத்திற்குப் பின் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
அவர்கள் நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்த இவர்கள், விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர். பின்னர் தங்கள் பயணத்தை நிறைவுசெய்து திட்டமிட்டபடி டிராகன் விண்கலம் வாயிலாக நேற்று பூமியை நோக்கி புறப்பட்டனர். 22 மணி நேர பயணத்திற்குப் பின், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் இன்று மாலை 3 மணிக்கு, ‘ஸ்ப்லாஷ் டவுன்’ முறையில் டிராகன் விண்கலம் கடலில் இறங்கியது.
தொடர்ந்து அந்த விண்கலம் கப்பலுக்குக் கொண்டு வரப்பட்டு, கதவு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறக்கப்பட்டது. விண்கலத்தில் இருந்து முதலாவதாக நாசாவின் பெக்கி விட்சன் வெளியே அழைத்து வரப்பட்டார். இரண்டாவது நபராக சுபான்ஷூ சுக்லா விண்கலத்தில் இருந்து வெளியே வந்தார். மற்றவர்களும் அடுத்தடுத்து வெளியே அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் 7 நாட்கள் தனிமையில் இருப்பார்கள்.
சுபான்ஷூ சுக்லா பூமிக்கு திரும்பியதை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேரலையில் பார்த்தனர். லக்னோவில் உள்ள சிட்டி மான்டெசரி பள்ளியில் சுக்லாவின் குடும்பத்தினர் நேரலையில் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பின் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். சுபான்ஷு சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா செய்தியாளர்களிடம் பேசிய போது, என் மகன் பாதுகாப்பாக திரும்பியுள்ளார். இறைவனுக்கு நன்றி. இந்த நிகழ்வை வெளியில் நின்று, தகவல்களை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. நான் உணர்ச்சிவசப்பட்டேன்.எப்படியிருந்தாலும், என் மகன் பல நாட்களுக்குப் பிறகு திரும்பியுள்ளார் என்று கூறினார்.
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: விண்வெளிக்கான வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பும் சுபான்ஷூ சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையணத்தை பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, தன அர்ப்பணிப்பு, தைரியம் மூலம் 100 கோடி மக்களின் கனவுகளுக்கு முன்மாதிரியாக உள்ளார். இது, நமது சொந்த விண்வெளி பயணமான ககன்யானை ககன்யானை நோக்கிய மற்றொரு மைல்கல் ஆகும் எனத் தெரித்துள்ளார்.
இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்கு அடுத்தபடியாக விண்வெளி பயணம் மேற்கொண்ட இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சுபான்ஷு சுக்லா.





