
கோவாவில் குஷாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சம்ஸ்தான் கோகர்ண பார்டகலி ஜீவோத்தம் மடத்தின் 550வது ஆண்டு விழாவையொட்டி, 77 அடி உயர பிரமாண்ட ஸ்ரீ ராமர் வெண்கலச் சிலையை பிரதமர் மோடி நவ.28 வெள்ளி அன்று திறந்து வைத்தார்.
கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை நவ.28 வெள்ளி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக, கர்நாடகாவின் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி அங்கிருந்து கோவாவுக்கு வந்தார். இங்கே மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலையை திறந்து வைத்து உரையாற்றினார். இந்த நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனராம். குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார், ஸ்ரீராமரின் இந்தச் சிலையை உருவாக்கியுள்ளார்.
பிரதமர் மோடி, மடம் உருவாக்கிய ‘ராமாயண கருப்பொருள் பூங்காவையும் திறந்து வைத்தார். அப்போது சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயம் ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.
சிலைத் திறப்புக்குப் பிறகு நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியா தற்போது ஒரு பிரம்மாண்டமான கலாசார மறுமலர்ச்சிக்கு சாட்சியாக உள்ளது. இன்றைய இந்தியா புதிய தீர்மானங்கள் மற்றும் புதிதாகக் கிடைத்த நம்பிக்கையுடன் தனது கலாசார அடையாளத்தை முன்னெடுத்துச் செல்கிறது.
அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுவது, காசி விஸ்வநாதர் கோவில் மறுசீரமைக்கப்படுவது, மற்றும் உஜ்ஜயினியில் மகாகால் கோவில் விரிவுபடுத்தப்படுவது ஆகியவை, தேசத்தின் ஆன்மீகப் பாரம்பரியம் புத்துயிர் பெறுவதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
நம் இளைஞர்களின் ஆற்றல், வளர்ந்து வரும் தன்னம்பிக்கை மற்றும் நமது கலாசார வேர்களுடனான புதுப்பிக்கப்பட்ட தொடர்பு அனைத்தும் இணைந்து ஒரு புதிய இந்தியாவை வடிவமைக்கின்றன.
ஆன்மீகம், தேசிய சேவை ஒரே நோக்கத்தில் இணக்கத்துடன் முன்னேறினால்தான், வளர்ந்த இந்தியாவிற்கான நமது இலக்கு நிறைவேறும். மேலும் மக்கள் நீர் பாதுகாப்பு மற்றும் சுதேசி பொருட்களை வாக்குகுதல் உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.





