
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் புகழ் பெற்றது உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில். இங்கே ஒரு லட்சம் பேர் கீதை பாராயணம் செய்யும் லட்ச கீதை பாராயண நிகழ்ச்சி நவ.28 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தில்லியில் இருந்து தனி விமானத்தில் மங்களூரு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உடுப்பிக்கு வந்து, பின்னர் உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்கு பிரதமர் மோடி சாலை வழியாக காரில் ரோடு ஷோ நடத்திக் கொண்டு வந்தார். உடுப்பி டவுனில் உள்ள நாராயணகுரு சதுக்கத்தில் இருந்து கல்சங்கா சந்திப்பு வரை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் நின்று பிரதமருக்கு, பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த பொதுமக்கள் பூக்களை தூவி அவருக்கு தங்கள் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தெரிவித்தனர்.
ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி தங்கக் கதவை திறந்து கோயிலுக்குள் சென்று மத்வ சரோவரில் தீர்த்த அபிஷேகம் செய்து ஸ்ரீகிருஷ்ணரை தரிசித்தார். கோவில் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்வர்ண தீர்த்த மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் ஸ்வர்ண தீர்த்த மண்டபம் வழியாக வந்து, ஸ்ரீபுட்டிகே மடத்தின் தலைவர் ஸ்ரீசுகுணேந்திர தீர்த்த சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் பிரதமர் மோடி லட்ச கீதை பாராயண நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார்.
மடத்தில் நடந்த லட்ச காண்ட கீதை பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய போது, பல்வேறு திட்டங்களுக்கும் பகவத் கீதைதான் அடிப்படை என அப்போது பிரதமர் மோடி கூறினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
மூன்று நாட்களுக்கு முன்பு, கீதை பிறந்த குருக்ஷேத்திரத்தின் புனித பூமியில் இருந்தேன். இன்று, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோரின் ஆசிர்வதிக்கப்பட்ட இந்த பூமிக்கு வருவது எனக்கு திருப்தியை தருகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் லட்சம் பேர் ஒன்றாக அமர்ந்து பகவத் கீதையின் ஸ்லோகங்களை உச்சரித்தபோது, உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியத்தைக் கண்டனர். பொது நலனுக்காக பாடுபடுமாறு கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற பகவத் கீதையின் செய்தியே, மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்களின் அடிப்படை. அமைதி மற்றும் உண்மைக்காகப் பாடுபடவும், அராஜகம் செய்பவர்களை அழிக்க வேண்டியதன் அவசியத்தையும் பகவத் கீதை நமக்குக் கற்பிக்கிறது.
கீதையின் வார்த்தைகள், தனி நபர்களை மட்டுமல்ல நாட்டின் கொள்கைகளையும் வடிவமைக்கின்றன. நாங்கள், ‘உலகமே ஒரு குடும்பம்’ என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம்.
குஜராத்துக்கும் உடுப்பிக்கும் தொடர்பு உண்டு. பொது நலனுக்காக பாடுபடுமாறு கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற பகவத் கீதையின் செய்தியே பல்வேறு திட்டங்களுக்கு அடிப்படையாகும்.
ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே, உடுப்பி புதிய மாதிரியை முன்வைத்தது. இது தேசிய கொள்கைகளுக்கு வழிகாட்டுகிறது. உடுப்பி தேசியக் கொள்கைகளுக்கும் வழிகாட்டியது. இந்த நகருக்கு வருவது மற்றொரு காரணத்தினால் எனக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. ஜன சங்கத்திற்கும், பாஜவின் சிறந்த நிர்வாக மாதிரிக்கும் உடுப்பி நகரமானது கர்மபூமியாகத் திகழ்கிறது. 1968ல் ஜன சங்கத்தின் தலைவர் விஎஸ் ஆச்சார்யாவை, நகராட்சி கவுன்சில் உறுப்பினராக உடுப்பி மக்கள் தேர்வு செய்தனர். அதன் மூலம் நிர்வாகத்துக்கான புதிய மாதிரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ராமஜென்ம பூமி இயக்கத்துக்கு உடுப்பி மக்களின் பங்களிப்பை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அறிவார்கள். அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்றும் நிகழ்வை ஸ்ரீவிஸ்வேச தீர்த்த சுவாமிகள் வழிநடத்தினார். தில்லி செங்கோட்டையில் இருந்து சுதர்சன சக்கர இயக்கத்தை நான் அறிவித்தேன். இந்த திட்டம் என்பது, பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட நாட்டின் முக்கிய இடங்களை சுற்றி, எதிரிகளின் தாக்குதலில் இருந்து காக்கும் பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவதாகும். எதிரிகள் அத்துமீறலில் ஈடுபட்டு, ஆக்கிரமிப்பைக் காட்டத் துணிந்தால் நமது சுதர்சன சக்கரம் அதை அழித்துவிடும். தெய்வீக ஞானம் மற்றும் ஆன்மிக ஆற்றல் பெற்ற சுதர்சன சக்கரம் போல் இருந்த நம் விமானப்படையின் எஸ் – 400 வான் பாதுகாப்பு கவசம், அண்டை நாடான பாகிஸ்தானின் தாக்குதல்களில் இருந்து நம்மை காத்தன. தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு ஆக்கிரமிக்க நினைக்கும் எதிரிகளை, இந்த சுதர்சன சக்கரம் அழிக்கும்.
ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கெனவே நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் போது, முந்தைய அரசுகள் மவுனம் காத்தன. ஆனால், இந்த முறை புதிய இந்தியா யாருக்கும் தலைவணங்கவில்லை. அதேசமயம் தன் குடிமக்களை பாதுகாக்கவும் தயங்கவில்லை.
ஆப்பரேஷன் சிந்தூர் நடந்த போது, நமது உறுதிப்பாட்டை தேசம் பார்த்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த சகோதரர் மற்றும் சகோதரிகள் பாதிக்கப்பட்டனர். பயங்கரவாத தாக்குதலின் போது முந்தைய அரசுகள் சோம்பேறித்தனமாக அமர்ந்திருந்தன. புதிய இந்தியா தனது மக்களைப் பாதுகாக்க தலைவணங்கவோ தயங்கவோ இல்லை என்றார் பிரதமர் மோடி.
உடுப்பி ஸ்வாமிகள் பேசியபோது, லட்ச கண்ட கீதா பாராயண மகோத்ஸவத்தை ஒட்டி வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறோம். பிரதமர் மோடி அர்ஜுனர் போல். அர்ஜுனன் இந்திரனின் அவதாரம். அவனே நரன் என மனித அவதாரம் எடுத்து வந்தான். நரேந்திர என்னும் பெயரின் பொருள் மனிதனாக வடிவெடுத்த இந்திரன் என்பது. ஆகவே நரேந்திர மோடி அர்ஜுனன் போலாவார். அர்ஜுனனே பகவத் கீதையை நேரடியாகக் கேட்டவன். இங்கே பகவத் கீதையின் லட்ச கண்ட பாராயணத்துக்கு வந்துள்ள நரேந்திர மோடிக்கு இதை விடப் பொருத்தம் உண்டோ என்று வியந்து பாராட்டினார்.





