
புதுதில்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இன்றைய கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார்.
அப்போது அவர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார்.
நாடு முழுவதும் புதிதாக 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதியளித்த பிரதமர் மோடியால், 2 லட்சம் வேலைவாய்ப்புகளை கூட உருவாக்க முடியவில்லை என சாடினார்.
மோடியின் ஆட்சியில் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இல்லை என சாடிய அவர், மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை முன் எப்போதும் இல்லாத வகையில் தவறாக வழிநடத்திவிட்டதாக குறிப்பிட்டார்.
இதனால் எல்லைப் பிரச்சனை, உள்நாட்டுப் பிரச்சனையாகி விட்டது என்றார்.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியால் நாட்டில் பொருளாதாரம் நிலைகுலைந்து காணப்படுவதாக சாடினார். GST வரிவிதிப்பு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தினார்.
கடும் விமர்சனத்திற்குள்ளான பண மதிப்பிழப்பு நடவடிக்கையை உரிய முறையில் சீராய்வு செய்யவில்லை என்றார். விவசாயிகளின் வருமானம் இருமடங்காக பெருகும் என்ற மோடியின் வார்ததை நிறைவேறாத வெற்று வார்த்தையாக தான் இருக்க போகிறது இந்த ஆட்சியில் என மன்மோகன் சிங் கடுப்பாகக் கூறினார்.



