
சென்னை: ம.நடராஜன் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, அவர் அனுமதிக்கப் பட்டிருக்கும் குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இன்று பரோலுக்கு விண்ணப்பித்த சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத் துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக குளோபல் மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தொடர்ந்து நடராஜனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டிருப்பதாக நடராஜனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தனது கணவர் நடராஜனைப் பார்க்க வேண்டும் என்று கூறி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, சிறைத்துறை நிர்வாகத்திடம் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அவரது பரோல் விண்ணப்பத்தை சிறைத்துறை நிர்வாகம் நிராகரித்து விட்டது. அண்மையில்தான் இதே காரணத்தை ஒட்டி பரோல் வழங்கப்பட்டது என்றும், இந்த நிலையில் மீண்டும் பரோல் தர முடியாது என்றும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் உயிரிழப்புகள் நேரும்போது கலந்து கொள்ள மட்டுமே பரோல் அளிக்க இயலும் என்றும் சிறைத்துறை பதிலளித்துள்ளதாகக் கூறப் படுகிறது.
முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைஇ சிகிச்சை செய்யப்பட்ட போது, அவரை உடன் இருந்து கவனிக்க வேண்டும் என்று கூறி பரோலுக்கு விண்ணப்பித்தார் சசிகலா. அவருக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.



