சென்னை: மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு அதிமுக., எம்பி.,க்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இன்று சட்டமன்றத்தில் பேசினார் மு.க.ஸ்டாலின்.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் தாக்கல் செய்து பேசிய மு.க.ஸ்டாலின், “உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் அதிமுக., எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்” என வலியுறுத்திப் பேசினார்.
மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காவிரி மேலாண்மை வாரியத்துக்காக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் படவில்லை என்று கூறி அதை தவிர்த்து விட்டார். இதே கருத்தை அதிமுக., நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரையும் கூறியுள்ளார்.
முன்னர், கடந்த 2014ம் வருடம் ஆகஸ்ட் 25ம் தேதியிட்ட தமிழக அரசின் குறிப்பாணையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியது குறித்து குறிப்பிடப் பட்டிருந்தது. .பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதால், தமிழகத்துக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது குறித்துக் குறிப்பிட்டதுடன், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் எச்சரிக்கையுடன் அணுகுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
ஜெயலலிதாவின் அந்தக் கடிதமும் வேண்டுகோளும், தமிழக நலனை மனத்தில் கொண்டு எழுதப் பட்டது. (இது குறித்த தினசரி செய்தியைக் காண்க) எனவே அதிமுக.,வினர் ஜெயலலிதா காட்டிய வழியில் நடப்பதாக இருந்தால், அந்தக் கடிதத்தின் படி தங்கள் கொள்கைகளை வகுத்து செயல்பட்டாக வேண்டும். இப்போதும் அப்படியே செயல்படுகின்றனர். (ஜெயலலிதா மோடிக்கு எழுதிய கடிதத்தின் முழு வடிவம்)
ஆனால், மோடி வெறுப்பும் மத்திய பாஜக., அரசை மட்டுமே குற்றம் சொல்லி கண்மூடித்தனமான அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், தமிழக நலனை ஆந்திர சந்திரபாபு நாயுடுவிடம் அடகு வைக்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார் என்பது, இன்றைய அவரது வேண்டுகோளில் வெளிப்பட்டது.
ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து விஷயமாக 50 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் நோட்டீஸ் கொடுத்திருக்கும் ஆந்திர மாநில கட்சிகளான தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்., ஆகியவற்றுக்கு ஆதரவாக தமிழக எம்பி.,க்கள் இயங்க வேண்டும் என்ற மு.க.ஸ்டாலினின் பேச்சு, தமிழக நலனுக்கு எதிரானது. காவிரி விவகாரத்துக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக இருந்தால், அதிமுக.,வினர் அது குறித்து தனியான முடிவு எடுக்க வேண்டுமே அன்றி, ஆந்திர மாநில அரசியலுக்குள் ஏன் புக வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை.