
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பி.,க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக., ஆதரிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், காவிரி விவகாரத்திற்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவையில் பதில் அளித்துள்ளார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக., ஆதரிக்க வேண்டும் என்ற ஸ்டாலின் கருத்து குறித்துப் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கும் எந்தத் தொடர்பு கிடையாது. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக மார்ச் 29ஆம் நாளுக்குப் பின் அனைவரும் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கலாம் எனத் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக., ஆதரிக்க வேண்டும் என்கிறார் ஸ்டாலின். ஆனால் அதற்கு ஓபிஎஸ்., இதற்கும் காவிரிக்கும் சம்பந்தமில்லை என்கிறார். இதே நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெளிவாக்கியிருக்கிறார் தம்பித்துரை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விட மாட்டோம் எனக் கூறியுள்ளார் மக்களவைத் துணைத்தலைவர் தம்பிதுரை.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும். இப் பிரச்னைக்காக கடந்த 11 நாட்களாக போராடி வருகிறோம். நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் செய்து வருகிறோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விட மாட்டோம். காவிரி பிரச்னையையும், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தையும் தொடர்புபடுத்தி பார்க்க கூடாது. எங்கள் போராட்டம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு எந்த விதத்திலும் தடையாக இல்லை… என்று கூறினார்.
ஆனால், மத்திய அரசின் தூண்டுதலிலேயே அதிமுக., இவ்வாறு நடந்துகொள்வதாக சமாஜ்வாதி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.



