மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு தேசியக் கொடி போர்த்தும் அளவுக்கு அவர் நாட்டுக்காக என்ன செய்து விட்டார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே. மேலும், அதனால்தான் நீரவ் மோடி விவகாரம் அமுங்கிப் போனதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை சிவாஜி பூங்கா அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசினார் ராஜ் தாக்கரே. அப்போது அவர், வங்கி மோசடியில் ஈடுபட்டு தப்பி ஓடிய நீரவ் மோடி குறித்து மக்கள் அதிகம் பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஸ்ரீதேவி மரணம் குறித்த சர்ச்சைகள் கிளம்பி, நீரவ் மோடி விவகாரம் மறக்கடிக்கச் செய்யப்பட்டது… என்று பேசினார் ராஜ் தாக்கரே.
ஸ்ரீதேவி பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பதால் மூவர்ணக் கொடியை அவரது உடலில் போர்த்தியதாக அரசு விளக்கம் கொடுத்தது. ஸ்ரீதேவி மிகப் பெரிய நடிகை என்ற போதிலும், நாட்டுக்காக அவர் என்ன செய்து விட்டார் என்று இப்படி மரியாதை எல்லாம் செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார் ராஜ் தாக்கரே. அவரது பேச்சு மும்பை திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.