
புது தில்லி: ஆதாயம் பெறும் பதவியை வகித்ததாகக் கூறி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
20 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று பிறப்பித்த தீர்ப்பில், எம்எல்ஏ.,க்களுக்கு போதிய அவகாசம் வழங்காமல் தகுதி நீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது என்று கூறியது. மேலும், இது குறித்து மறு விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்ததாகக் கூறி தில்லி சட்டப் பேரவையின் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் 20 பேரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலின் பேரில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத் தக்கது.
முன்னதாக, 2015, மார்ச் 13 ல் ஆம் ஆத்மி கட்சியின் 21 எம்எல்ஏக்களை பார்லிமென்ட்ரி செயலர்களாக நியமிக்கும் உத்தரவை தில்லி அரசு பிறப்பித்தது. அவர்கள் தில்லி அமைச்சர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக இருப்பார்கள் என்று முதல்வர் கேஜரிவால் கூறினார்.
ஆனால் அவர்கள் 21 பேரும் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தது. அதில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது.
இது தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், ‘துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பார்லிமென்ட்ரி செயலராக நியமித்த நடவடிக்கை சட்ட விரோதமானதாகும். இதனால், இது தொடர்பான முதல்வரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என்று நீதிமன்றம் 2016 செப்டம்பரில் உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரஜௌரி கார்டன் தொகுதி ஆம் ஆத்மி உறுப்பினர் ஜர்னைல் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, 20 எம்எல்ஏக்கள் மீதான விசாரணையை தேர்தல் ஆணையம் தொடர்ந்தது. பார்லிமென்ட்ரி செயலர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டதால், தங்கள் மீதான ஆதாயப் பதவி விவகார வழக்கு விசாரணையை கைவிடுமாறு சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தல் ஆணையத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த முறையீட்டு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து, விசாரணை முடிந்த நிலையில், ஆம் ஆத்மி எல்ஏக்கள் 20 பேரையும் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது அந்தப் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார். இதை அடுத்து 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களையும் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது. இதை எதிர்த்துதான் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வழக்கு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளது.
இதை அடுத்து, இது நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று அரவிந்த் கேஜ்ரிவால் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
सत्य की जीत हुई। दिल्ली के लोगों द्वारा चुने हुए प्रतिनिधियों को ग़लत तरीक़े से बर्खास्त किया गया था। दिल्ली हाई कोर्ट ने दिल्ली के लोगों को न्याय दिया। दिल्ली के लोगों की बड़ी जीत। दिल्ली के लोगों को बधाई। https://t.co/eDayHziHSn
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 23, 2018



