
பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆட்சி செய்து வருகிறார் சித்தராமையா. அவரது அமைச்சரவையின் பதவிக் காலம் மே 28 ஆம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான தேதியை ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டமன்றத்துக்கான தேர்தல் தேதியை அறிவிக்கும் போது, தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாகக் கூறினார். மேலும், வாக்குப்பதிவு நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரைவாக செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்படும். தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய எந்திரம் பயன்படுத்தப்படும்.
வேட்பாளர்கள் செலவு செய்வதைக் கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் செலவாக ஒரு வேட்பாளர் ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம். கன்னட மொழியிலும் வாக்குச்சீட்டு விவரங்கள் அளிக்கப்படும். வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா அமைக்கப்படும். மத்திய மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்… என்று கூறினார்.
தேர்தல் அறிவிப்பின் படி,
வேட்புமனு தாக்கல் துவங்கும் நாள்: ஏப்ரல் 17
கடைசி நாள்: ஏப்ரல் 24
வேட்புமனு பரிசீலனை: ஏப்ரல் 25
வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்ரல் 27
வாக்குப்பதிவு: மே 12
வாக்கு எண்ணிக்கை: மே 15
இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் குறித்த அறிவிப்புகள், நடைமுறைகள் எதுவும், தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்படாது எனத் தெரிவித்தார். முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது இதனால் தள்ளிப் போகும் என்று செய்திகள் உலா வந்தன.



