சினிமா பாணி வங்கிக் கொள்ளை: சென்னை ஐ.ஓ.பி.,யில் ரூ.33 லட்சம் பணம் நகை கொள்ளை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

bank theft - 2026

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், நேற்று வங்கி லாக்கர் உடைக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் ரூ. 33 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன.

ஞாயிறு விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை காலை வங்கி ஊழியர்கள் வங்கியின் கதவைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது, அறைகள் முழுவதும் ஒரே புகை மண்டலமாக இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், பரபரப்புடன் ஓடிச் சென்று பார்த்த போது வங்கியின் லாக்கர்கள் உடைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த தீயணைப்பு சிலிண்டர்கள் துண்டிக்கப் பட்டிருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கொள்ளை நடந்த லாக்கரை சோதனையிட்டனர். வங்கியின் பின்புறத்தில் ஓட்டை போட்டு உள்ளே குதித்த திருடர்கள் வெல்டிங் மிஷின் மூலம் கட் செய்து, 2 லாக்கர்களை உடைத்துள்ளனர்.

பின்னர் அதிலிருந்த ரூ.33 லட்சம் ரூபாய் பணம், 133 பைகளில் இருந்த தங்க நகைகள் இவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதற்கு முன்னதாக, வங்கி சிசிடிவி கேமராக்கள் அனைத்தையும் அணைத்து வைத்து, அதன் டிவிஆரையும் தூக்கிச் சென்று விட்டனராம்.

இந்த வங்கியில் கொள்ளை அடிப்பதற்கு சுமார் 1 மாதம் முன்பிருந்தே கொள்ளைக்காக திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை தினத்தை தேர்வு செய்த கொள்ளையர்கள், கேஸ் சிலிண்டர்கள், கேஸ் கட்டிங் கருவி, ஆக்சிஜன் சிலிண்டர் முதலானவற்றை வாங்கி வந்து, முதல் நாளே வங்கியில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, இந்த வங்கியைப் பற்றிய முழு விவரமும் தெரிந்த ஒருவர்தான் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என முடிவு செய்த போலீஸார், அனைவரிடமும் விசாரிக்கத் துவங்கினர். அப்போது, வங்கியில் ஹவுஸ் கீபிங் வேலை செய்து வந்த, சபீல் லால்சந் என்ற வடமாநில இளைஞர் தலைமறைவாகி யுள்ளான். அவனும், அவனது கூட்டாளியும் சேர்ந்துதான் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.

கேஸ்கட்டர் மெஷினை சாதாரண ஆள் இயக்க முடியாது. எனவே அவர்களுக்கு வெல்டிக் ஊழியர் ஒருவரும் உதவி செய்திருப்பது, போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் வாடிக்கையாளர்களின் நகைகள், பணம் கொள்ளை இடப்பட்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்தக் கொள்ளைச் சம்பவத்தை விசாரிக்க காவல்துறை ஆணையர் அரவிந்தன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.