
திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபலமான ரேடியோ ஜாக்கி ரசிகன் ராஜேஷை மர்ம நபர்கள் கூர்மையான கத்தியால் அவரது ஸ்டூடியோவிலேயே வைத்து குத்திக் கொன்று தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பிரபலமான ரேடியோ ஜாக்கியாக இருப்பவர் ராஜேஷ். ரசிகன் ராஜேஷ் என்ற பெயரில் பிரபலம் அடைந்தவர். மிமிக்ரி கலைஞர். நாட்டுப்புறப் பாடல் கலைஞரும் கூட! இவர், நேற்று இரவு 2 மணி அளவில் வேறோரு மேடை நிகழ்ச்சியை முடித்துவிட்டு, தனது நண்பர் குட்டன் என்பவருடன் திருவனந்தபுரத்தில் உள்ள மெட்ரோ ஸ்டூடியோ ரேடியோ நிலையத்துக்கு திரும்பியுள்ளார்.
அங்கே தாங்கள் கொண்டு சென்ற உபகரணங்களை கீழிறக்கி விட்டு, தனது நண்பர் குட்டனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப்பகுதிக்கு சிவப்பு நிற காரில் வந்த இருவர், கூர்மையான ஆயுதங்களால் ராஜேஷையும் குட்டனையும் கடுமையாகத் தாக்கினர். இதில் காயமடைந்த ராஜேஷ் உயிரிழந்தார். குட்டன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
36 வயதான ராஜேஷ், தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். ரெட் எஃப்.எம்.மில் பணியாற்றியுள்ளார். முன்னதாக தோஹாவில் கேரளா எப்.எம்மில் பணியாற்றியவர்.



