
அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற நலத் திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நாளை வரை இருந்தது, அடுத்து வரும் ஜுன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
எரிவாயு இணைப்பு, மண்ணெண்ணெய், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட மானியத்துடன் கூடிய அரசு சேவைகள் மற்றும் அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை மார்ச் 31க்குள் இணைக்க வேண்டும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதற்கான அவகாசத்தை வரும் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது, ஏற்கெனவே உள்ள வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது, பாஸ்போர்ட் மற்றும் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது உள்ளிட்டவை தற்போதைக்கு கட்டாயமல்ல என்றும், அதற்கான அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.



