
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்றுடன் கெடு முடிவடையவுள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்க, எம்பிக்கள் மத்திய அரசை பல்வேறு வகையில் மிரட்டி வருகின்றனர். நேற்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டிய நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்ட கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழக முதல்வரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்குவேன் என்று கலசப்பாக்கம் அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இந்த தற்கொலை மற்றும் ராஜினாமா மிரட்டல்களுக்கு மத்தியில் உள்ள பாஜக அரசு செவிகொடுக்குமா? என்று தெரியவில்லை. மேலும் இந்த ராஜினாமா ஒரு நாடகமாகவும் பொதுமக்களால் பார்க்கப்படுகிறது. ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் அவர் கவர்னர் அல்லாது சபாநாயகரை சந்தித்து தான் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வரிடம் ராஜினாமா கடிதம் கொடுப்பதாக அறிவித்திருப்பது ஒரு நாடகமே என்று மக்கள் கூறி வருகின்றனர்.
கர்நாடக தேர்தல் முடியும் வரை காங்கிரஸ், பாஜக இரண்டு தேசிய கட்சிகளுமே காவிரி மேலாண்மை அமைக்க முயற்சிகள் எடுக்காது என்பதுதான் நிதர்சன உண்மை. எனவே அதிமுகவினர் மத்திய அரசை பயமுறுத்துவதை கைவிட்டு சட்டரீதியில் என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது



