
பாலிவுட் நடிகர் சல்மான்கான் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் 5 வருட சிறைத்தண்டனை பெற்றார். தற்போது அவர் ஜோத்பூர் சிறையில் இருக்கும் நிலையில் அவரை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் அவரது வழக்கறிஞர்கள் உள்ளனர். சல்மான்கானின் மேல்முறையீட்டு வழக்கு மற்றும் ஜாமீன் மனு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்து கொள்வதாக ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று சல்மான்கான் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷி திடீரென மாற்றப்பட்டார். இவருடன் சேர்த்து மொத்த 87 நீதிபதிகளை இடமாற்றம் செய்து ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு காரணமாக ஜோத்பூர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி இன்னும் ஓரிரு நாட்களில் நியமனம் செய்யப்படும் என தெரிகிறது.
எனவே ஜோத்பூர் நீதிமன்றத்திற்கு வேறு புதிய நீதிபதி பொறுப்பேற்ற பின்னரே சல்மான்கான் மேல்முறையீடு மற்றும் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் என தெரிகிறது. அதனால் இன்னும் ஓரிரு நாட்கள் சல்மான்கான் சிறையில் இருபபார் என்பது குறிப்பிடத்தக்கது.



