
உபநயன ஸம்ஸ்காரத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தள்ளிப் போடவே கூடாது. கல்யாணத்திலே பண ஸம்பந்தத்தைக் கொண்டு விட்டு அதற்காக கால தாமஸம் பண்ணுவது தப்பு. சாஸ்திர விரோதமானது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கல்யாணத்திலாவது தவிர்க்க முடியாமல் ‘ஷோ’ அம்சங்கள் சேர்ந்துவிட்டன எனலாம்.
நாம் வேண்டாமென்றாலும் பிள்ளையகத்தார் வேண்டும் என்றால் இந்த ஆடம்பரங்களைப் பண்ணித்தான் ஆகவேண்டும். இதற்குப் பணம் சேர்க்க வேண்டும். இதற்காகக் கால தாமஸம் பண்ண வேண்டியிருக்கிறது.
அதோடு கூடக் கல்யாணம் என்பதில் வரன் என்று ஒருத்தனைத் தேடிப் பிடித்து, நமக்கு அவனைப் பிடித்து, அவன் வீட்டாருக்கும் நம் ஸம்பந்தம் பிடிக்க வேண்டியதாக இருக்கிறது.
வரன் வேட்டையில் காலம் செலவிட வேண்டியதாகிறது. பூணூல் விஷயம் இப்படியில்லை. இதை ஏன் ஆடம்பரமாகப் பண்ணவில்லை என்று எந்த ஸம்பந்தியும் நம்மை நிர்பந்திக்கப் போவதில்லை.
மாப்பிள்ளை தேடுகிறதுபோல் இதில் வெளியே யாரையோ தேடிப்போய் பரஸ்பர ஸம்மதத்தைப் பெறவேண்டியும் இருக்கவில்லை. ஆதலால் உரிய காலத்தில் ஒரு பிள்ளைக்குப் பூணூல் போடாமலிருப்பதற்கு எந்த ஸமாதானமும் சொல்வதற்கில்லை. அதை எந்த விதத்திலும் மன்னிப்பதற்கேயில்லை.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்



