புதுதில்லி: ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஸ்வீடன் புறப்பட்டுச் சென்றார். திங்கள் கிழமை இன்று முதல் ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார் மோடி. முதலில் ஸ்வீடன் செல்லும் மோடி, இந்தோ-நார்டிக் மாநாட்டில் பங்கேற்கிறார்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ‘நார்டிக்’ நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் இந்தியா பங்கேற்கும் உச்சி மாநாடு செவ்வாய்க்கிழமை நாளை நடைபெறுகிறது.
ஸ்வீடன் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும், நார்டிக் நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்கின்றனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு ‘பொதுவான எதிர்காலத்தை நோக்கி’ என்னும் தலைப்பில் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மோடி உள்பட 53 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த 2 மாநாடுகளிலும் பங்கேற்பதற்காக மோடி இன்று காலை தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்வீடன் சென்றார். பிரதமருடன் இந்திய உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்றும் செல்கிறது.
நாளை ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வெனை சந்தித்து இரு நாடுகளின் உறவு குறித்து ஆலோசனை நடத்துகிறார் மோடி. அப்போது இரு தரப்பிலும் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஸ்வீடன் மன்னர் கார்ல் கஸ்டாப்பையும் மோடி சந்தித்துப் பேசுகிறார்.
ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்களுடன் மோடியும், லோப்வெனும் கலந்துரையாடுகின்றனர். அப்போது இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு ஸ்வீடன் தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு விடுப்பார். அடுத்து, ஸ்வீடனில் வசிக்கும் 20 ஆயிரம் இந்திய சமூகத்தினருடன் மோடி கலந்துரையாடுகிறார்.
ஸ்வீடன் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை இரவு மோடி லண்டன் செல்கிறார். இங்கிலாந்தில் 4 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் மோடி, வரும் 18ஆம் தேதி காலை இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை சந்திக்கிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 10க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
பின்னர், லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்துக்கு சென்று அங்கு நடைபெறும் அறிவியல் கண்காட்சியை பார்வையிடும் மோடி, லண்டனில் வசிக்கும் இந்திய சமூகத்தினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் நிறுவப்பட்டுள்ள இந்திய தத்துவஞானியும் சமூக சீர்திருத்தவாதியுமான கர்நாடகத்தின் பசவேஸ்வரய்யா சிலைக்கு மரியாதை செய்கிறார்.
பின்னர், மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்துப் பேசுகிறார் மோடி. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களில் தனிப்பட்ட முறையில் சந்திப்புக்கு சிறப்பு அழைப்பு விடுத்துள்ள மூன்று பிரதமர்களில் மோடியும் ஒருவர்.
19, 20ஆம் தேதிகளில் காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டின் முக்கிய அமர்வுகளில் மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் 5 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 19ஆம் தேதி மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி எலிசபெத் சார்பில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப் படுகிறது.
20- அன்று வின்சர் காஸ்டில் அரண்மனையில் மாநாடு நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வாக காமன்வெல்த் தலைவர்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் தனியாக உதவியாளர் துணையின்றி சந்தித்து பேசுகிறார்கள்.
இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு 20ஆம் தேதி ஜெர்மனி செல்லும் மோடி, பிரதமர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் 21-ஆம் தேதி மோடி நாடு திரும்புகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது காமன்வெல்த் தலைவர்கள் மாநாடு. இந்த மாநாட்டில் கடைசியாக 2009-ஆம் ஆண்டு மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டது. அதன்பின்னர் ஆஸ்திரேலியா, இலங்கை, மால்டா ஆகிய நாடுகளில் நடந்த மாநாடுகளில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் காமன்வெல்த் நாடுகளின் தலைவரும், இங்கிலாந்து ராணியுமான எலிசபெத், பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதினார். அதில், லண்டன் மாநாட்டில் மோடி பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்தாராம்.