
புது தில்லி: 12 வயதுக்குக் குறைவான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் விரைவில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
12 வயதுக்கும் குறைவான சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிறுமியரைப் பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் பதில் அளித்து உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் 12 வயதுக்குக் குறைவான சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்வதற்கு போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.



