
மணமக்களை வித்தியாசமான முறையில் புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞருக்கு பாராட்டு குவிகிறது. அந்தப் படம் இப்போது வைரல் ஆகி வருகிறது.
கேரளாவின் திருச்சூரில் மணமக்களை மரத்தில் தொங்கியபடி நூதன முறையில் புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞரின் சாகசக் காட்சி, தற்போது அதிகளவில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
துபையில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றும் சைஷ் ரோபர்ட்டுக்கும் நவ்யா ஜோஸ்க்கும் திருசூரில் கடந்த 15ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆல்பத்திற்காக புகைப்படம் எடுக்கும் பணியில் போட்டோகிராபர் விஷ்ணு ஈடுபட்டார்.
அப்போது, வித்தியாசமான முறைகளில் புகைப்படம் எடுத்து அசத்தியுள்ளார். குறிப்பாக, அருகிலுள்ள மரத்தில் ஏறி, தலைகீழாக தொங்கிய படி மணமக்களை அவர் எடுத்த காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பதிவை மட்டும் இதுவரை சுமார் 4 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
ட்விட்டரில் வைரலாகியிருக்கும் இந்த வீடியோ காட்சி பற்றி கருத்து தெரிவித்துள்ள புகைப்படக் கலைஞர் விஷ்ணு, இதற்கு முன்பாக நான்கைந்து முறை மரத்தில் ஏறி போட்டோ எடுத்திருந்தாலும், சிறந்த போட்டோவை எடுத்தது இதுவே முதல்முறை எனக் கூறியுள்ளார்.
மேலும், பறவையின் பார்வையில் இருந்து இந்த புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆர்வமே, மரத்தின் தலைகீழாக தொங்கியதற்கு காரணம் என்றும் விஷ்ணு குறிப்பிட்டுள்ளார்.



