புது தில்லி: 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைப் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்குபவர்களுக்கு அதிகபட்ச மரண தண்டனை அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து குழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிப்பது என்பது சட்டமாகியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி சிலரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டதாக தகவல் பரப்பப் பட்டு, பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் 5 பேரால் மைனர் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சூரத் நகரில் 11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, உடலில் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இப்படி பல இடங்களில் தொடர்ச்சியாக சிறுமிகள் பலாத்கார சம்பவங்கள் நடப்பது அரசுக்கு பெரும் கவலையையும், குழந்தைகள் பாதுகாப்பில் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வந்தது. இந்தச் சம்பவங்களால் நாடு முழுவதும்பெரும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. ஐரோப்பிய பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடியிடம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொடி பிடித்து கோஷமிட்டு தங்கள் அதிருப்தியையும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஐரோப்பிய பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, முதல் வேலையாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டி, சிறுமிகள் பாலியல் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த அவசரச் சட்ட்டத்தில் சில திருத்தங்களும் செய்யப்பட்டன. இந்திய குற்றப்பிரிவு சட்டம் ஐபிசி , தி எவிடென்ஸ் ஆக்ட், சிஆர்பிசி விதிமுறைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்கும் போக்சோ சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்கவும், சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த சட்டத் திருத்தத்தின் படி,
* பலாத்கார வழக்குகளுக்கு 7 முதல் 10 ஆண்டுகளாக விதிக்கப்படும் சிறைத் தண்டனை, இனி, வாழ்நாள் சிறைத் தண்டனையாக மாற்றப் பட்டுள்ளது.
* 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு குறைந்த பட்ச சிறைத் தண்டனை 10 ஆண்டுகளாக இருந்தது, இனி 20 ஆண்டுகள் சிறை தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதை வாழ்நாள் சிறை தண்டனையாகவும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
* 12 வயத்துக்கும் குறைவான குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாகவும், குற்றத்தின் தீவிரத்துக்கு ஏற்ப வாழ்நாள் சிறை, அல்லது மரண தண்டனை அளிக்கவும் வகை செய்யப் பட்டுள்ளது.
* அனைத்து விதமான பாலியல் பலாத்கார வழக்குகளையும் 2 மாதங்களுக்குள் விசாரித்து முடித்தாக வேண்டும்.
* மேல்முறையீட்டுக்குச் செல்லும் போது, 6 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.
* பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ஜாமீன் வழங்குவதிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
* 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தல் அல்லது கூட்டு பலாத்கார குற்றச்சாட்டில் சிக்குபவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது.
* பலாத்கார குற்றங்களை விசாரிக்க தனியாக விரைவு நீதிமன்றங்களை, மாநில அரசுகளுடன், யூனியன் பிரதேசங்களுடன், உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாய்வு செய்து உருவாக்க வேண்டும்.
* அனைத்து காவல் நிலையங்களிலும், மருத்துவ மனைகளிலும் பலாத்கார வழக்குகளின் போது ஆதாரங்களைக் கையாள சிறப்பு கருவிகள் கொடுக்கப்படுதல்
* குறித்த நேரத்துக்குள் பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரித்து முடிக்க, கூடுதலாக போலீஸார், நீதிமன்றம், நீதிபதிகள், வழக்கறிஞர்களை நியமித்தல்
– உள்ளிட்ட சட்டத் திருத்தங்கள் இதில் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த அவசரச் சட்டத்தின் வரைவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மத்திய அ ரசு நேற்று அனுப்பி வைத்தது. அதற்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார்.