பதாமியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை: மிதப்பில் சித்தராமையா

இந்தியா சற்றுமுன்

SID 1460941g - 2026

பெங்களூரு: பதாமி தொகுதியில் என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் எனக்குக் கவலை இல்லை. யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மிதப்பில் கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் சார்பில் மைசூர் – சாமுண்டேஸ்வரி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இந்த நிலையில் தற்போது பதாமி தொகுதியிலும் அவர் மனு தாக்கல் செய்கிறார். இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், பதாமி தொகுதியில் சித்தராமையாவின் வெற்றி வாய்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், இங்கு கொள்கைகள்தான் முக்கியம். நபர்கள் இல்லை. எனவே பதாமியில் யார் என்னை எதிர்த்துப் போட்டியிட்டாலும் எனக்குக் கவலை இல்லை. பாஜக சார்பில் ஸ்ரீராமுலு போட்டியிட்டாலும் சரி, அல்லது வேறு யார் நிறுத்தப்பட்டாலும் சரி. எனக்குக் கவலை இல்லை.

பாகல்கோட், விஜயபுரா மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள்தான் என்னை இங்கு போட்டியிடுமாறு வற்புறுத்தினர். நான் இங்கே போட்டியிடுவதன் மூலம் இந்தப் பகுதியில் காங்கிரஸுக்கு வலு சேரும் என்பது அவர்களது கருத்து. நாங்கள் மதவாதம், ஜாதியவாதத்தை எதிர்த்துப் போட்டியிடுகிறோம். மோதுகிறோம். மதவாத சக்திகளை வீழ்த்தி வெற்றி பெறுவோம்.

சாமுண்டேஸ்வரி தொகுதி பற்றி எனக்குக் கவலை இல்லை. அங்கே மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள். ஏற்கெனவே எனக்கு ஆதரவாக வாக்களிக்க அவர்கள் முடிவு செய்து விட்டனர் என்றார் சித்தராமையா.

இதற்கு இடையே எடியூரப்பா, தாம் அங்கே போட்டியிட விரும்புவதாகக் கூறியுள்ளார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உத்தரவிட்டால், பதாமி தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து நான் போட்டியிட தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார் எடியூரப்பா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.