
இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் சித்தராமையாவை டுவிட்டரில் ஹிந்தியில் விமர்சித்த பா.ஜ., பொதுச் செயலர் முரளிதர் ராவுக்கு, ‘எனக்கு ஹிந்தி தெரியாது’ என சித்தராமையா பதில் டுவிட் செய்துள்ளார்.
கர்நாடகாவில் மே 12ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல்வர் சித்தராமையா, மைசூரின் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். அடுத்து, பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பதாமி தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இது குறித்து, பாஜ., பொதுச் செயலரும் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளருமான முரளிதர் ராவ், தனது டுவிட்டர் பதிவில், நீண்ட முயற்சிக்குப் பின் நீங்கள் சாமுண்டீஸ்வரி தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அங்கே தோற்றுவிடுவோம் என்ற அச்சத்திற்காக தற்போது இரண்டாவது தொகுதியை தேடி வருகிறீர்கள்’ என ஹிந்தியில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் சித்தராமையா ‘எனக்கு ஹிந்தி தெரியாது; அதனால் ஆங்கிலம் அல்லது கன்னட மொழியில் பதிவிடுங்கள்’ என பதிலளித்து டிவிட்டரீல் பதிவிட்டிருந்தார்.
ಕನ್ನಡ ಅಥವಾ ಇಂಗ್ಲಿಷ್ ನಲ್ಲಿ ಟ್ವೀಟ್ ಮಾಡಿ ಸರ್. ಹಿಂದಿ ಅರ್ಥವಾಗುವುದಿಲ್ಲ https://t.co/i9rbgLyFJU
— Siddaramaiah (@siddaramaiah) April 21, 2018
ஹிந்தி என்பது இந்தியாவின் ஒரு மொழி மட்டுமே. அது அனைவருக்குமான மொழி அல்ல என்று கூறி, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் ஹிந்தியில் எழுதப் பட்டிருந்த பெயர்ப் பலகையை மாற்றச் சொல்லி கடிதம் எழுதி சர்ச்சையைக் கிளப்பினார் சித்தராமையா. தொடர்ந்து, ஹிந்தியை கற்கலாம் அது அவரவர் விருப்பம், ஆனால் ஹிந்தியை மாநிலத்தில் அலுவல் மொழியாக எந்த விதத்திலும் ஏற்க மாட்டோம் என்று கூறிவருகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தராமையா!



