spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாலண்டனில் ஒலித்த மோடியின் மனதின் குரல்: இந்திய வம்சாவழியினரிடம் ஆற்றிய உணர்ச்சி உரை!

லண்டனில் ஒலித்த மோடியின் மனதின் குரல்: இந்திய வம்சாவழியினரிடம் ஆற்றிய உணர்ச்சி உரை!

- Advertisement -

பிரதமர் நரேந்திர மோடி லண்டன் மாநகரில் ஏப்ரல் 2018இல் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்…

வாழ்க்கைப் பாதை கடினங்கள் நிறைந்தது. ரயில்வே நிலையங்கள் பற்றி, நாம் பேசுகிறோம் என்றால், அதில் என் தனிப்பட்ட வாழ்க்கை கலந்திருக்கிறது. நான் நடத்திய வாழ்க்கைப் போராட்டத்தின், பொன்னான பக்கங்கள் அவை. அது எனக்கு, வாழக் கற்றுக் கொடுத்தது, எதிர்கொள்வதைக் கற்றுத் தந்தது. மேலும், வாழ்க்கை என்பது நமக்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்காகவும் வாழ முடியும். (கைத்தட்டல்).

இதை தண்டவாளங்களின் மீது ஓடும் ரயில்கள், எழுப்பும் ஒலியிலிருந்து நான், என் சிறு வயது முதல் கற்றேன். புரிந்து கொண்டேன். இது என் தனிப்பட்ட விஷயம். ஆனால் ராயல் பேலஸ் என்பது, நரேந்திர மோடிக்கானது அல்ல. (கைத்தட்டல்)

இது என்னுடைய கதையல்ல, ராயல் பேலஸ் என்பது, 125 கோடி நாட்டு மக்களின் மனவுறுதியின் பலனில் விளைந்தது. (கைத்தட்டல்)

ரயில் தண்டவாளங்களைச் சேர்ந்த மோடி தான் நரேந்திர மோடி. ராயல் பேலஸ் 125 கோடி நாட்டு மக்களின் ஒரு சேவகன் மட்டுமே. இது நரேந்திர மோடியினுடையது அல்ல. (கைத்தட்டல்)

அது மட்டுமல்ல, இது பாரதத்தின் மக்களாட்சியின் பலம், பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டதின் வல்லமை, மக்களாட்சி முறையில் மக்கள் தான் மகேசனின் வடிவங்கள். அவர்கள் மட்டும் முடிவு, செய்து விட்டால், தேநீர் விற்கும் ஒருவர்கூட, அவர்களின் பிரதிநிதியாக அரண்மனையில் (ராயல் பேலஸில்) நுழைந்து கைகுலுக்க முடியும்.  எப்போது, மனதில் சுணக்கம் ஏற்பட்டு விடுகிறதோ, அடைந்தவரை போதும், இதற்கு மேல் எதிலும் ஈடுபட வேண்டாம் என்று நினைத்தால், வாழ்க்கையில் முன்னேற்றம் நின்றுவிடும்.

ஒவ்வொரு வயதிலும், ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு நிலையிலும், ஏதாவது ஒன்றில் புதியதாக ஈடுபட்டு அடையத் துடிக்கும் எண்ணம், வாழ்க்கையை முடுக்கி விடுகிறது.  இல்லையென்றால், வாழ்க்கையே ஸ்தம்பித்துப் போய் நின்று விடுகிறது.  யாராவது துடிப்புடன் துருதுருவென்று இருப்பது சரியானது அல்ல என்று யாராவது கூறினால், அவர்களுக்கு வயதாகி விட்டது என்றே நான் கூறுவேன். (கைத்தட்டல்)

என்னுடைய பார்வையில் துடிப்புடன் இருத்தல் என்பது இளமையின் அடையாளம்.  வீட்டில் சைக்கிள் வைத்திருப்பவர் ஸ்கூட்டர் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  ஸ்கூட்டர் இருந்தால் கார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவார்கள்.  இந்த உணர்வு இல்லையென்று சொன்னால், நாளை சைக்கிளும் இல்லாமல் போகும். சரி பஸ்ஸிலேயே பயணிக்கலாம் என்ற எண்ணம் வரும். இது வாழ்க்கை அல்ல.

மகிழ்ச்சி என்னவென்றால், இன்று 125 கோடி நாட்டு மக்களுடைய மனங்களில், ஒரு உற்சாகம் எதிர்பார்ப்பு துடிப்பு, பெருகி வெளிப்படுவதுதான்.  நாம் ஏமாற்றம் நிறைந்த ஒரு சூழலில் முன்னர் மூழ்கியிருந்தோம்.  சரி விடுப்பா ஒண்ணும் நடக்கப் போறதில்லை, என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. சந்தோஷமான விஷயம் எப்படிப்பட்ட சூழலை ஏற்படுத்தி இருக்கிறோம் என்றால், இன்று மக்கள், எங்களிடம் நிறைய எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள்.

உங்களைப் போன்றவர்கள், முன்னமேயே நாட்டை விட்டு வெளியேறியதால் உங்களுக்குத் தெரிய வாய்ப்பிருக்காது. ஆனால் இன்றிலிருந்து 15-20 ஆண்டுகள் முன்பாக, பஞ்சம் என்ற நிலைமை ஏற்பட்ட காலத்தில், கிராமத்து மக்கள், அரசு அலுவலகங்களுக்கு வந்து மனு கொடுத்தார்கள்.  அவர்களின் விண்ணப்பம் என்ன?  இந்த முறை பஞ்சம் ஏற்பட்டதென்றால், எங்கள் இடத்தில், மண்ணைத் தோண்டும் வேலையைக் கண்டிப்பாகக் கொடுங்கள்.  அப்போது நாங்கள், பாதையில் மண்ணைப் போடுவதால் எங்களுக்கு நல்ல சாலை கிடைக்கும்.

அந்த வேளையிலும், நிறைய துடிப்பு மக்களிடம் இருந்தது, பஞ்சம் வந்தால் செய்ய வேண்டியது பற்றிய எதிர்பார்ப்பு இருந்தது. அப்போது நிலத்தில் குழி தோண்டும் வேலை கிடைக்கும், மண்ணைப் பாதையில் போடும் சந்தர்ப்பம் இதனால் கிடைக்கும்.

குஜராத் முதல்வராக என் அனுபவம் என்னவென்றால், யாரிடத்தில், ஒருவழிச்சாலை இருக்கிறதோ அவர்கள், இருவழிப் பாதை அமையுங்களேன் என்று கேட்டுக் கொள்வார்கள்.  இரு வழிப் பாதை இருந்தால் ஐயா இங்கே செப்பனிடப்பட்ட சாலை போடக் கூடாதா என்பார்கள்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, உச்சல் நீஜர், என்ற குஜராத்தின் எல்லைப்புற மாவட்டம் இருக்கிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த சில பழங்குடியினர் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். அவர்கள் எங்களுக்கு செப்பனிடப்பட்ட சாலை வேண்டும் என்றார்கள். ஒருகாலத்தில் நான் உங்கள் பகுதியில் ஸ்கூட்டரில் பயணித்திருக்கிறேன், பேருந்தில் பயணித்திருக்கிறேன், உங்கள் காடுகளில் சுற்றியிருக்கிறேன், உங்களிடத்தில் தான் பாதை இருக்கிறதே என்றேன்.  பாதை என்னவோ இருக்கிறது, ஆனால் நாங்கள் இப்போது வாழையைப் பயிர் செய்கிறோம், அவற்றை ஏற்றுமதி செய்கிறோம் என்றார்கள்.

நாங்கள் இந்தச் சாலையில் பயணித்தால், ட்ரக்குகளில் வாழைப்பழங்கள் நசுங்கி விடுகின்றன என்றார்கள். இதனால் எங்களுக்கு 20 சதவீதம் வீணாகிப் போகிறது, எங்களுக்கு ஆகையால் செப்பனிடப்பட்ட சாலை வேண்டும், அப்போது தான் எங்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது என்றார்கள்.  என் தேசத்தின் பழங்குடிகளின் மனங்களில், துடிப்பு உருவாகிறது என்று சொன்னால், அதுதான் என்னைப் பொறுத்தவரை வளர்ச்சிக்கான வித்து.

ஆகையால் தான் நான் துடிப்போடு இருப்பதைத் தவறாக எண்ணுவதில்லை.  இரண்டாவது விஷயம்.  நீங்கள் குடும்பத்திலேயே கூடப் பார்த்திருக்கலாம், 3 மகன்கள் இருக்கிறார்கள் என்றால், பெற்றோர் மூவரிடத்திலுமே அன்பு செலுத்துகிறார்கள்.  ஆனால் வேலை கொடுக்கும் போது ஒருவரிடத்தில் இதைச் செய் என்பார்கள்.  யார் செய்கிறார்களோ அவர்களிடத்தில் தானே கூறுவார்கள். (கைத்தட்டல்)

தேசம் இன்று என்னிடத்தில் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கிறது என்று சொன்னால் இதனால் தானே வைத்திருக்கிறது!!  இவர் மீது நம்பிக்கை இருக்கிறது, அவரிடம் ஒப்ப்டைத்து விடு… இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது இவர் செய்து முடித்து விடுவார் என்று நம்புகிறார்கள். (கைத்தட்டல்)

12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு மகான், உங்களுக்கு படிக்க ஆர்வமிருக்குமென்றால், பகவான் பசவேஸ்வரருடைய அருளுரைகளைப் படித்துப் பார்க்க வேண்டும்.  இன்று இவை, அனைத்து மொழிகளிலும் கிடைக்கின்றன.  இன்று அவரது பிறந்த நாள்.   எனக்கு அடுத்தடுத்து அலுவல்கள் இருந்தாலும், நான் சிறிது நேரம் ஒதுக்கினேன். கடந்தமுறை இங்கே அவரது சிலை திறப்புக்கு வரும் நல்வாய்ப்பு கிட்டியது, நான் இன்று அங்கே சென்று மலரஞ்சலிகளைச் செலுத்தி வந்தேன்.  (கைத்தட்டல்)

துர்பாக்கியமான விஷயம் என்னவென்றால் நமக்கு நம்மைப் பற்றிய பெருமிதம் இல்லை. நம் மகான்கள் பற்றித் தெரியவில்லை.  நாம், மேக்னா கார்டா பற்றித் தெரிந்து வைத்திருக்கிறோம். படிக்கிறோம், ஜனநாயக விழுமியங்கள் பற்றி உலகுக்கே கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் இந்த விஷயம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம், 12ஆம் நூற்றாண்டிலேயே, பகவான் பஸவேஸ்வர், மேக்னா கார்டாவுக்கு மிக முன்னதாகவே, ஜனநாயகத்துக்காக, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தார்.

அவர் அனுபவ மண்டபம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்.  அங்கே சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் வந்து கூடினார்கள். சமூக விஷயங்கள் பற்றிக் கலந்துரையாடினார்கள். அதுவும் அந்தக் காலகட்டத்தில், பெண் பிரதிநிதிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருந்தார்கள். இது 12ஆம் நூற்றாண்டில் நடந்தது.  சமூக விஷயங்கள் பற்றி விவாதித்த பின்னர் அவற்றுக்கான தீர்வுகள் காணப்பட்டன.  நமது தேசம் வகுப்புவாதம் உயர்ந்தோர் தாழ்ந்தோர் தீண்டாமை, இவை காரணமாக பிளவுபட்டிருந்த காலத்தில், பகவான் பஸவேஸ்வர், இவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தார். உயர்ந்தோர் தாழ்ந்தோர் தீண்டாமையையெல்லாம் தாண்டி சமூகத்தை ஒருங்கிணைத்தார் அவர்.

இப்போது எனக்கு பகவான் பஸவேஸ்வர் பற்றிய ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது, அவரது ஒரு அறவுரையைக் கேளுங்கள்.  அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால், சாதி தற்காலிக நிறுத்தம் தான். சொல் என்னுடையதாக இருக்கலாம், ஆனால் பொதிந்திருக்கும் உணர்வு இது தான்.  எங்கே நிறுத்தம் ஏற்படுகிறதோ, அங்கே, வாழ்க்கையே நின்று போகிறது.  எந்த இடத்தில், இயக்கம் இருக்கிறதோ, அந்த இடத்தில், வாழ்க்கையின், புதிய விரிவடைதல்களுக்கான வாய்ப்புக்கள், புதிது புதிதாக ஏற்படுகின்றன.  இந்த வகையிலான உணர்வு, பகவான் பஸவேஸ்வரின் உரைகளில் இருக்கின்றன, நிறுத்தத்தை அவர் மரணம் என்று கருதினார். அதுவும் 12ஆம் நூற்றாண்டிலேயே.  ஆகையால் தான், ஜனநாயகத்தின் பொருட்டு பெண்களுக்கான அதிகாரப் பங்களிப்பின் பொருட்டு, சமூக விழிப்புணர்வின் பொருட்டு பகவான் பஸவேஸ்வர் ஆற்றியிருக்கும் தொண்டு, இன்றுங்கூட, நமது தேசத்துக்கு மட்டுமல்லாமல் உலகுக்கே கூட, வழிகாட்டியாக விளங்குகின்றது. (கைத்தட்டல்)

நீங்கள், 1857ஆம் ஆண்டிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள், 1947ஆம் ஆண்டு வரை, அதற்கு முந்தைய காலகட்டத்தைக் கூட எடுத்துக் கொள்ளலாம்… நான் 1857லிருந்து கணக்கெடுக்கிறேன்.  அந்த ஆண்டு தான் முதல் சுதந்திரப் போர் நடைபெற்றது.  எந்த ஆண்டை வேண்டுமானாலும் அந்த 100 ஆண்டுகளில் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், இந்தியாவின் எந்த மூலையையும் எடுத்துக் கொள்ளுங்கள், யாரேனும் ஒருவர், ஒவ்வொரு காலகட்டத்திலும் தேசத்தின் சுதந்திரத்துக்காகத் தன் இன்னுயிரை அர்ப்பணித்து வந்திருக்கிறார்கள்.  தேசம் சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து வந்திருக்கிறார்கள்.  பல இளைஞர்கள் தங்கள் இளமைக் காலத்தைச் சிறைச் சாலைகளில் தொலைத்திருக்கிறார்கள்.

அதாவது சுதந்திரப் போராட்டம், இந்தியாவின் எந்த மூலையிலும் எந்தவொரு காலகட்டத்திலும் தடைப்பட்டதே இல்லை.   அவர்கள் வந்தார்கள், போராடினார்கள், உயிரைத் தியாகம் செய்தார்கள். தொடர்ந்து நடைபெற்றது சுதந்திரப் போராட்டம்.  ஆனால் அண்ணல் காந்தியடிகள் என்ன செய்தார்?  அண்ணல் காந்தியடிகள், இந்த உணர்வனைத்துக்கும் ஒரு வடிவம் அளித்தார்.  அவர் சாமான்ய மக்களை ஒன்று படுத்தினார், மிகச் சாதாராணமான மக்களிடம் அவர், உங்களுக்குச் சுதந்திரம் வேண்டுமில்லையா, இப்படிச் செய்யுங்கள், கைகளில் துடைப்பத்தை எடுத்துச் சுத்தம் செய்யுங்கள், தேசத்துக்குச் சுதந்திரம் கிடைக்கும் என்றார்.

உங்களுக்குச் சுதந்திரம் வேண்டுமென்றால் நீங்கள் ஆசிரியராக இருந்தால், குழந்தைகளுக்கு நன்றாகக் கல்வி புகட்டு, தேசத்துக்குச் சுதந்திரம் கிடைக்கும் என்றார்.  உங்களால், முதியோருக்குக் கல்வி புகட்ட முடியுமா செய்யுங்கள், கதராடை நெய்ய முடியுமென்றால் செய்யுங்கள், இளைஞர்களை ஒன்றிணைத்து காலை வேளையில் விழிப்புணர்வுச் செயல்களில் ஈடுபடலாம்.  அண்ணல் காந்தியடிகள், சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார்.

சாமான்ய மக்களிடம், அவர்களின் திறனுக்கேற்ப பணிகளை அளித்தார்.  நீங்கள் ராட்டினத்தை எடுத்துக் கொள்ளுங்கள், நெசவு செய்யுங்கள், தேசத்துக்குச் சுதந்திரம் கிடைக்கும்.  மக்கள் மனங்களில் நம்பிக்கை துளிர்த்தது, அட இதனால் சுதந்திரம் கிடைத்து விடுமே.

என்னைப் பொறுத்த மட்டில், உயிர் துறக்க பலர் தயாராக இருந்தார்கள், தேசத்துக்காக மரிக்கப் பலர் சித்தமாகவே இருந்தார்கள், ஆனால், அவர்கள் வந்தார்கள், தியாகம் புரிந்தார்கள், மீண்டும் பலர் வந்தார்கள், அவர்களும் உயிர்த் தியாகம் செய்தார்கள்.  ஆனால் காந்தியடிகள், இந்தியாவின் மூலை முடுக்கெங்கிலும் உள்ளவர்களை இணைத்தார். கோடிக் கணக்கானவர்களை ஒருங்கிணைத்தார், இதன் காரணமாக, சுதந்திரம் கிடைப்பது சுலபமானது.

வளர்ச்சியும் கூட, மக்கள் பேரியக்கமாக மாற வேண்டும் என்று நான் கருதுகிறேன்.  அரசு மட்டுமே நாட்டையே மாற்றி விடும் (கைத்தட்டல்) என்று யாராவது நினைத்தார் என்றால், அரசாங்கம் முன்னேற்றம் ஏற்படுத்தி விடும்.

எங்காவது பள்ளம் ஏற்பட்டிருக்கிறது என்றால், கிராமத்து மக்கள் ஒன்றுகூடுவார்கள், ஒரு மனுவைத் தயார் செய்வார்கள், ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்திக் கொள்வார்கள்,  தில்லி சென்று தங்கள் மனுவைக் கொடுப்பார்கள்.  ஒரு ஜீப்பை வாடகைக்கு எடுக்கும் செலவில், அவர்களே பள்ளத்தை நிரப்பிக் கொண்டிருக்கலாம்.  ஆனால் இதை அரசுதான் செய்ய வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பிறகு இப்படிப்பட்ட ஒரு மனநிலை ஏற்பட்டு விட்டது. யார் செய்வார்கள் அரசாங்கம் செய்யும்.  இதன் காரணமாக என்ன ஆனது என்றால், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகப்பட்டுப் போனது.

இதையே எடுத்துக் கொள்ளுங்கள், பேருந்தில் ஒருவர் பயணிக்கிறார். இதை நீங்களேகூட அனுபவித்திருக்கலாம், பேருந்தில் தனியாகச் செல்கிறோம். அருகே எந்தப் பயணியும் இல்லையென்றால், பயணத்தைக் கழிக்க வேண்டுமே, அப்போது இருக்கைக்கு அடியில் விரலை விட்டு நோண்டுவார்கள்.  (கைத்தட்டல்) சரியா?  அதனடியில் ஓர் ஓட்டையை ஏற்படுத்துவார்கள். மெல்ல மெல்ல மெல்ல அதைப் பெரிதாக்கிக் கொண்டே போவார்கள். (கைத்தட்டல்) ஆனால் எப்போது இது என்னுடைய பேருந்து, இது அரசுடையது அல்ல, இந்த தேசம் என்னுடையது, இந்த அரசு என்னுடையது என்ற உணர்வு ஏற்படுகிறதோ, அப்போது அவர் அப்படிச் செய்ய மாட்டார். தேசத்தில் இந்த உணர்வு, அதிகப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இரண்டாவதாக, (கைத்தட்டல்) ஜனநாயகம் என்பது, ஏதோ ஒரு ஒப்பந்தம்  போன்றது அல்ல.  நான் இன்று உங்களுக்கு வாக்களித்து விட்டேன், நீங்கள் 5 ஆண்டுகளுக்குப் பணியாற்றுங்கள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன செய்தீர்கள் என்று கேட்பேன். இல்லையென்றால் அடுத்தவரை ஆட்சியில் அமர்த்துவேன்.  இது தொழிலாளர் ஒப்பந்தம் அல்ல நண்பர்களே.  (கைத்தட்டல்) இது பங்களிப்பு நிறைந்த ஒப்பந்தம் நண்பர்களே.  ஆகையால் நான், participatory democracy என்று கூறுகிறேன், அதில் அழுத்தம் அளிக்கிறேன்.

இயற்கைப் பேரிடர்கள் விஷயத்தில் நீங்களே கண்டிருக்கலாம், அரசின் சக்தியை விட சமுதாயத்தின் சக்தி அதிகம் வெளிப்படுகிறது. நாம் அதில், சில கணங்களிலேயே தீர்வு ஏற்படுத்தும் வல்லமை ஏற்படுகிறது எப்படி?  பொது மக்களிடத்தில் அளவில்லாத ஆற்றல் இருக்கிறது. ஜனநாயக அமைப்பில், மக்கள் மீது நீங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைக்கிறீர்களோ, மக்களை எந்த அளவுக்கு அதிகம் இணைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு பலன்கள் கிடைக்கும்.

அரசு அமைக்கப்பட்டவுடன் நான் கழிப்பறைகளைக் கட்டும் இயக்கத்தை ஏற்படுத்தினேன். அரசால் மட்டுமே இதைச் செய்திருக்க முடியுமா? அரசு முன்னர் 5000 உருவாக்கியிருந்தால் இப்போது 10000 ஏற்படுத்தியிருக்கும். பழைய அரசு 5000 கட்டியிருந்தால் மோடியின் அரசு 10000 கட்டியிருக்கும்.  பத்தாயிரம் என்பது வேலைக்கு ஆகுமா நண்பர்களே.  மக்கள் பங்களிப்பு நல்கினார்கள், இயக்கம் வெற்றியடைந்தது.  மக்கள் சக்தியை கவனியுங்கள் நண்பர்களே.  (கைத்தட்டல்)

இந்தியாவில், மூத்த குடிமக்களுக்காக, ரயில் பயணங்களில் சலுகை இருக்கிறது, டிக்கெட்டுக்களில்.   நான் வந்த பிறகு, நான் மூத்த குடிமகன் எனக்குச் சலுகை கிடைக்கிறது, ஆனால் இது எனக்கு வேண்டாம் என்ற தேர்வை, நீங்கள் விண்ணப்பப் படிவத்தில் சேருங்கள் என்று அதிகாரிகளிடம் கூறினேன்.  மிகச் சுலபமான விஷயம், பிரதமர் என்ற முறையில் நான் எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை.  உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும், இந்தியாவின் சிறப்புத் தன்மையைப் பாருங்கள் சாமான்யனின் தேசபக்தியைப் பாருங்கள்,  இப்போது தான் எனக்குத் தெரிவிக்கப்பட்டது, இதுவரை, 40 லட்சம் மூத்த குடிமக்கள், குளிர்சாதன ரயில் பெட்டியில் பயணிப்பவர்கள், தாங்களாகவே முன்வந்து, சலுகையை ஏற்க மாட்டோம் என்று எழுத்து வடிவத்தில் கொடுத்திருக்கிறார்கள், அவர்கள் முழுத் தொகையைச் செலுத்திப் பயணிக்கிறார்கள்.  (கைத்தட்டல்)

இதையே நான், சட்டமாக்கியிருந்தால், இனி குளிர் சாதன ரயில் பெட்டிகளில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு, இந்தச் சலுகை கிடையாது என்றிருந்தால் போராட்டங்கள் நடந்திருக்கும். உருவ பொம்மையை எரித்திருப்பார்கள், என்னைப் பற்றி popularity ரேட்டிங்குகள் வந்திருக்கும். மோடிக்கு சரிவு (கைத்தட்டல்) இதுதான் நடந்திருக்கும். ஆமாம், இப்படி நடப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

பாருங்கள் 40 லட்சம் பேர். ஒரு முறை நான் செங்கோட்டையிலிருந்து கூறினேன், யாருக்கு வாங்கும் சக்தி இருக்கிறதோ அவர்களுக்கு ஏன் மானியம் தேவை என்றேன்.  நமது தேசத்தில், எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை ஆதாரமாக வைத்து தேர்தல்கள் நடந்து கொண்டிருந்தன. சிலர் கூறி வந்தார்கள் என்னைப் பிரதமராக்குங்கள், இப்போது உங்களுக்கு 9 சிலிண்டர்கள் கிடைக்கின்றன நான் 12 தருகிறேன், என்று அறிவித்தார்கள், 2014இல்.

நான் நேரடியாக மக்களிடம் உங்களுக்குத் தேவையில்லையென்றால் அதைத் துறந்து விடுங்களேன் என்று கேட்டுக் கொண்டேன். இந்தியாவின், சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள், எரிவாயு மானியத்தைக் கைவிட்டார்கள். (கைத்தட்டல்) தேசத்தில் நாணயமானவர்களுக்குக் குறைவே இல்லை. தேசத்திற்காக உயிர் வாழும் ஆக்கபூர்வமான செய்கை செய்பவர்களுக்கும் குறைவில்லை.  நம்முடைய வேலையெல்லாம், தேசத்தின் திறனைப் புரிந்து கொள்வது, அவர்களை இணைப்பது தான்; நான் முயல்வது என்னவென்றால், நாம் தான், அரசாங்கத்தில் ஆட்சி செய்து நிர்வாகம் செய்கிறோம் என்ற இந்த அஹங்காரத்தை அரசாங்கங்கள் கைவிட வேண்டும். மக்கள் தான் மெய்யான சக்தி. அவர்களை இணைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும். அப்போது நாம் விரும்பிய பலனை, மக்களே நம்மிடம் கொண்டு சேர்ப்பார்கள்.

ஆகையால் நான் மக்களை என்னோடு இணைத்துக் கொண்டு பயணிக்கும், எண்ணத்தை மனதில் தாங்கி முன்னேறிக் கொண்டிருக்கிறேன். பாரதத்தின் இயல்பு, வெற்றியோடு திகழ்வது தான்.  தோல்வியுறாமல் இருப்பது தான். அதே வேளையில், ஒருவருடைய உரிமையைத் தட்டிப் பறிப்பது என்பது, பாரதத்தின் சரிதத்திலேயே கிடையாது. சிலர், தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதைத் தொழிலாகவே கொண்டிருக்கும் போது, என்னுடைய தேசத்தின் அப்பாவி மக்களை, கொன்று வருகிறார்கள். போர் புரிய சக்தி அற்ற இவர்கள், முதுகிலே கோழைத்தனமாகக் குத்துகிறார்கள்… (கைத்தட்டல்) இங்கே இருப்பது மோடி (கைத்தட்டல்) உங்களுக்குப் புரியும் மொழியிலேயே பாடம் கற்பிக்கத் தெரிந்தவன்.

நமது ராணுவ வீரர்கள் கூடாரங்களிலே படுத்து உறங்கும் வேளையில், கோழைத்தனமாக அவர்களைக் கொல்லுகிறார்கள். நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று யாராவது விரும்புகிறீர்களா? மக்கள் ஒலி முள்ளை முள்ளால் நான் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மக்கள் ஒலி இதனால் தான் surgical strike செய்யப்பட்டது.  என் படை மீதும் என் படை வீரர்கள் மீதும் நான் பெருமிதம் கொள்கிறேன்.   மக்கள் ஒலி தீட்டப்பட்ட திட்டத்தை மக்கள் ஒலி 100 சதவீதம், எந்தவொரு சிறு தவறும் செய்யாமல், அவர்கள் அமல்படுத்தினார்கள். சூரியன் உதிக்கும் முன்னரே திரும்ப வந்து சேர்ந்தார்கள்.

இன்று இந்தியா இருக்கும் நிலைக்கு, தேசம் சுதந்திரம் அடைந்த பிறகு அனைத்து அரசுகளின் அனைத்து பிரதமர்களின் அனைத்து மாநில அரசுகளின் அனைத்து முதல்வர்களின், ஒவ்வொரு மக்கள் பிரநிதியின் பங்களிப்பும் இருக்கிறது. இதை, நான் செங்கோட்டையிலேயே கூறியிருந்தேன்.  இதை நான் ஏற்கிறேன். ஆனால், என்ன காரணத்தால், இத்தனைத் திட்டங்களுக்குப் பிறகும், இத்தனை செலவு செய்த பிறகும், சாமான்ய மக்களின் வாழ்க்கையில் ஏன் மாற்றம் ஏற்படவில்லை.

அண்ணல் காந்தியடிகள் அளித்திருக்கும் கோட்பாட்டை நான் ஏற்கிறேன், எந்தவொரு வளரும் நாட்டுக்கும் இதைவிடச் சிறப்பான ஒரு கோட்பாடு ஏற்றதாக இருக்க முடியாது.  அண்ணல் சொன்னார்… நீங்கள் எந்த ஒரு திட்டத்தை ஏற்படுத்தினாலும், அதை எப்படி அளக்க வேண்டுமென்றால், கடைக்கோடியில் இருக்கும் பரம ஏழையின் வாழ்க்கையில், எற்படுத்தக் கூடிய தாக்கத்தை உணர்ந்து உருவாக்க வேண்டுமென்றார்.

காந்தியடிகளின் இந்தக் கோட்பாடு என்னுள் கலந்து கரைந்து விட்டது.  நாமெல்லாம் என்ன தான் பெரிய பெரிய திட்டங்கள் போட்டாலும், நாம் யாருக்காக அவற்றைப் போடுகிறோமோ, சமுதாயத்தின் கடைக்கோடியில் இருக்கும் அந்த ஏழைக்கு, அதை எப்படிக் கொண்டு சேர்க்கிறோம் என்பது தான் முக்கியம்.  நான் மிகவும் கடினமான, பணியை மேற்கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும்.   என்னுடைய பணிகளை, தவறானவையாகச் சித்தரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படலாம் என்பதையும் நான் அறிவேன்.  இதனாலெல்லாம் நான் என் முயற்சிகளைக் கைவிட வேண்டுமா கூறுங்கள்..?  ஏழையை அவன் நிலைக்கே விட்டு விட வேண்டுமா சொல்லுங்கள்…?

என்னால் இப்படிச் செய்ய முடியாது.   நீங்களே கற்பனை செய்து பாருங்கள், ஒரு, சின்ன, பெண் குழந்தை பலாத்காரம் செய்யப்படும் போது, எத்தனை வலியேற்படுத்தும் சம்பவம்… சிந்தியுங்கள்.  உங்கள் அரசில் இத்தனை நிகழ்ந்தது, எங்கள் அரசில் இத்தனை தான் நிகழ்ந்தது என்றா கூற முடியும் சொல்லுங்கள்? இதைவிட கேவலமான விஷயம், இருக்க முடியாது என்று நான் உறுதிபட நம்புகிறேன்.

பலாத்காரத்தை பலாத்காரமாகவே நாம் நோக்க வேண்டும்.  ஒரு குழந்தைக்கு எதிரான இத்தகைய ஒரு கொடுமையை நாம் எப்படிச் சகித்துக் கொள்ள முடியும் ஆகையால், நான் செங்கோட்டையிலிருந்து இந்த விஷயம் குறித்து புதிய அணுகுமுறையைக் கையாண்டேன்.  என்ன கூறினேன் என்றால் உங்கள் பெண், மாலை தாமதமாக வீடு திரும்பினால் எங்கே சென்றாய், ஏன் சென்றாய், யாரைச் சந்தித்தாய், ஃபோனில் உரையாடினால் ஏய் பேசுவதை நிறுத்து யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் போதும் என்கிறோம், நாம் பெண்களையே கேள்விகள் கேட்கிறோமே, எங்கே சென்றாய் என்று உங்கள் மகன்களிடம் கேளுங்களேன் (கைத்தட்டல்) இந்தத் தீமை சமூகத்துடையது தனிநபருடையது வக்கிரமான நடவடிக்கை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் இது தேசம் கவலை கொள்ள வேண்டிய விஷயம்.  இந்தப் பாவச் செயலைச் செய்பவரும் யாரோ ஒருவருடைய மகன் தானே?  அவருடைய வீட்டிலும் அன்னை இருக்கிறாள் இல்லையா?  அதே வகையில், கற்பனை செய்து பாருங்கள், சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில், பாரதத்தில், சுகாதாரத்தின் பரவலாக்கம், வெறும் 35- 40 சதவீதமாகவே இருந்தது.  இன்றும்கூட, நமது தாய்மார்களும் சகோதரிகளும் அவதிப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் புத்தகங்கள் மூலமாக ஏழ்மையைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. (கைத்தட்டல்)

டிவியின் திரையில், ஏழ்மையை அனுபவிக்கத் தேவையில்லை நான் வாழ்ந்து பார்த்திருக்கிறேன்.  ஏழ்மை என்றால் என்ன பிற்பட்டநிலை என்றால் என்ன, ஏழ்மை என்பது வாழ்க்கையில் எப்படி மனிதனைக் கசக்கிப் பிழியும் என்பதை அனுபவித்திருக்கிறேன்.  ஆகையால், (கைத்தட்டல்) நான் உளமாற நம்புகிறேன், அரசியலெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், என்னுடைய சமூகநீதி என் தேசநீதி எனக்குக் கற்பிப்பது என்னவென்றால், ஏழைகளின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்.

இந்த உணர்வு உந்தத்தான் நான் செங்கோட்டையிலிருந்து கூறினேன், நமது, 18,000 கிராமங்களுக்கு இதுவரை, மின்சாரம் சென்று சேரவில்லை.  ஆம் மற்ற இடங்களுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது.  அதைக் கொண்டு சேர்த்தவர்களுக்கு என் வணக்கங்கள், ஆனால் 70 ஆண்டுகளுக்குப் பிறகு 18,000 கிராமங்களுக்குச் சென்று சேரவில்லை என்பது, இந்தப் பொறுப்பையும் நாம் தானே ஏற்க வேண்டும்? (கைத்தட்டல்) நான் அரசு அதிகாரிகளிடம் இதை எப்போது செய்து முடிப்பீர்கள் என்று கேட்ட போது, அவர்கள் 7 ஆண்டுகள் பிடிக்கும் என்றார்கள்.  என்னால் 7 ஆண்டுகள் காத்திருக்க முடியாது என்றேன்.  ஆயிரம் நாட்களில் வேலையை முடிப்பேன் என்று, நான் செங்கோட்டையிலிருந்து அறிவிப்பு செய்து விட்டேன்.  கடினமான வேலை தான் கடுமையான நிலப்பரப்பு, சில இடங்கள் தீவிரவாதிகளும் மாவோவாதிகளும் நிறைந்தவை. 18,000 கிராமங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு சேர்க்கும் பணி முடிவடையும் தறுவாயில் இருக்கிறது. கிட்டத்தட்ட முடிந்த நிலையில் இன்னும் சுமார் 150 கிராமங்களே எஞ்சி இருக்கின்றன, பணிகள் நடைபெற்று வருகின்றன. (கைத்தட்டல்)

கற்பனை செய்து பாருங்கள் ஒரு ஏழைத்தாய், காலைக்கடன்களைக் கழிக்க, சூரியன் உதிக்கும் முன்பாக, காட்டை நோக்கிச் செல்ல நினைக்கிறார்.  பகல் வேளையில் செல்ல வேண்டியிருந்தால், தன் வலிகளைச் சகித்துக் கொள்கிறார், சூரியன் அஸ்தமிக்கும் வேளைக்காகக் காத்திருக்கிறார், இயற்கை உபாதைகளை எதிர்கொள்ளூம், அந்தத் தாய்க்கு எத்தனை வலி ஏற்படும்.. எத்தனை துன்பம் உண்டாகும், அவர் உடல் எத்தனை பாதிப்புக்குள்ளாகும் சிந்தியுங்கள்! நம்மால் கழிப்பறையைக் கட்ட முடியாதா?  இந்தக் கேள்வி, என்னை உறங்கவிடாமல் வாட்டியது.  அப்போது தான் எனக்குத் தோன்றியது, பெண்களின் துயரம் பற்றிய என் உணர்வுகளை நான், எந்தக் கூச்சமும் இல்லாமல் நான் தெரிவிப்பேன். பொறுப்பு மிகப் பெரியதாக இருக்கும். ஆனால் தேசம் எனக்குத் துணை நின்றது என்பதைக் கண்கூடாகக் கண்டேன்.

சுமார் 3 லட்சம் கிராமங்கள், திறந்தவெளியில் மல ஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டிருக்கின்றன.  (கைத்தட்டல்) பணிகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகையால், last mile delivery, இது ஜனநாயகத்தில், அரசுகளின் முதன்மையான கடமை.

இப்போது நான், சமீபத்தில் ஒரு, சவாலை எதிர்கொண்டேன்.  முதல் சவால் என்னவென்றால், கிராமங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு சேர்ப்பது.  என்னுடைய அடுத்த சவால், வீடுகளுக்கு மின்சாரத்தைக் கொண்டு சேர்ப்பது. இப்படிப்பட்ட 4 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. பாரதத்தில் மொத்தமாக, 25 கோடிக் குடும்பங்கள் இருக்கின்றன.  125 கோடி நாட்டு மக்கள். ஆனால் சுமார் 25 கோடிக் குடும்பங்கள் இருக்கின்றன.  சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கழித்து சுமார் 4 கோடிக் குடும்பங்கள், இன்றும்கூட 18ஆம் நூற்றாண்டு வாழ்க்கையே தொடர்கிறது.  அவர்கள் எண்ணை விளக்கிலேதான் காலம் கழிக்கிறார்கள்.  நான் இந்த சவாலை ஏற்றுக் கொண்டேன்.  சௌபாக்கியா திட்டத்தின்படி இலவசமாக, அந்த 4 கோடிக் குடும்பங்களுக்கு இலவச மின்னிணைப்பு அளிப்பேன். அவர்களின் குழந்தைகள் மின்விளக்கின் துணை கொண்டு படிப்பார்கள். அவர்கள் இல்லங்களில் கணிப்பொறி இயக்கலாம். மொபைல் சார்ஜ் செய்யலாம் அவர்கள் உலகோடு இணைந்து கொள்ளலாம்.

டிவி வாங்க முடிந்தால் அதைப் பார்க்கலாம், மாறி வரும் உலகைக் காணலாம், உலகோடு தங்களை இணைத்துக் கொள்ள, அவர்கள் துடிப்பானதொரு வாழ்க்கை வாழலாம்.  (கைத்தட்டல்)

உங்களுடைய பாஸ்போர்ட்டின் பலம், இன்றைய அளவில், அதிகரித்திருக்கிறதா இல்லையா? (கைத்தட்டல்) நீங்கள் அயல்நாட்டில் வசிக்கிறீர்கள் நீங்கள் இந்திய வம்சாவழியினர் என்று மற்றவர்கள் அறியும் போது, உங்களை அவர்கள் நோக்கும் கண்ணோட்டம் மாறியிருக்கிறதா இல்லையா? (கைத்தட்டல்)

உண்மையைச் சொல்லுங்கள்… நான் மகிழ வேண்டும் என்பதற்காகக் கூறாதீர்கள்.  (கைத்தட்டல்)  மாறியிருக்கிறதா? மக்கள் ஒலி உங்களைப் பார்ப்பவர்கள் உங்களை பெருமிதத்தோடு பார்க்கிறார்களா? மக்கள் ஒலி இந்தியா அதே தானே? முன்னரும் அப்படித்தானே இருந்தது? நீங்களும் இருந்தீர்கள்.  உலகும் இருந்தது.  இப்போது மாற்றத்தை உணர்கிறீர்களா இல்லையா? மக்கள் ஒலி

இதை இந்தியா செய்து காட்டியிருக்கிறது, இன்று, உலகம் முழுவதிலும், பாரதத்தின் வல்லமை நிலை நாட்டப் பட்டிருக்கிறது.  125 கோடி நாட்டு மக்கள் வசிக்கும் தேசம் மிகப் பெரிய சந்தை என்பதால் அல்ல, பாரதத்தின் செயல்திட்டங்கள் காரணமாக, சீரான நடவடிக்கைகள் காரணமாக.

நெருக்கடிகள் நிறைந்த உலகத்தில், நீங்களும் நல்லவர்கள் நாங்களும் நல்லவர்கள் வாருங்கள் அமர்ந்து பேசலாம் வழவழ கொழகொழ வென்ற, நமது அணுகுமுறையைக் கைவிட்டோம். எது உண்மையோ, அதை உரைக்கும் வகையில் பேசுவது.  எது சத்தியமோ, தைரியமாக அந்தப் பாதையில் பயணிப்பது, இந்த சாமர்த்தியத்தை இந்தியா வெளிப்படுத்தியது.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் வரை எந்த பாரதப் பிரதமரும் இஸ்ரேல் செல்லவில்லை, யோசித்துப் பாருங்கள்.  (கைத்தட்டல்) யார் தடுத்தார்கள்? (கைத்தட்டல்) இந்தியா மனோதிடத்தை வெளிப்படுத்த வேண்டும்.  நான் இஸ்ரேல் செல்ல வேண்டும் என்று நினைத்தால், நேராக இஸ்ரேல் செல்வேன் என்று இந்தியா உரக்கச் சொல்ல வேண்டும்.  என்று பாலஸ்தீனம் செல்ல வேண்டுமோ, அன்று தைரியமாக பாலஸ்தீனம் செல்வோம்.  (கைத்தட்டல்) நான் சௌதி அரேபியாவும் செல்வேன் அவர்கள் அளிக்கும் கௌரவத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன். தேசத்திற்கு எரிசக்தித் தேவையேற்பட்டால் ஈரானுக்குக்கூடச் செல்வேன். (கைத்தட்டல்)

நீங்கள் யூ.ஏ.ஈ. பயணத்தைக் கற்பனை செய்து பாருங்கள், பாரதத்திலிருந்து 1-1 ½ மணி நேரத்தில் அங்கே சென்று விடமுடியும்.  அல்லது 2 மணி நேரத்தில் சென்று விட முடியும்.  23 ஆண்டுகள் வரை அங்கே யாரும் செல்லவேயில்லையே!! நீங்களே சொல்லுங்கள், இந்தியாவிடம் அவர்களுக்கு எதிர்பார்ப்புக்கள் இருக்குமா இருக்காதா.  ஆனால் இன்று, 4 ஆண்டுகளுக்குப் பிறகு, யாரும் இந்தக் கேள்வியை எழுப்ப முடியாது.  (கைத்தட்டல்) இதற்குக் காரணம் (கைத்தட்டல்) இதற்குக் காரணம் மோடி அல்ல.  மோடி 125 கோடி நாட்டு மக்களின் சக்தியின் மீது வைத்த நம்பிக்கை தான் காரணம்.   (கைத்தட்டல்)

மோடிக்கு பாரதத்தின் மகத்தான பாரம்பரியங்கள் மீதான நம்பிக்கை காரணம்.   மோடிக்கு இந்தியாவின் வரலாறு இந்தியாவின் கலாச்சாரம் இந்தியாவின் வாழ்க்கை மீது முனைப்பு இருக்கிறது.  பாரதம் கூறும் சத்தியத்தை, என்னால் உலகுக்குப் புரிய வைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதன் விளைவாகத்தான், இன்று உலகெங்கும், ஒவ்வொரு துறையிலும் இப்படி…… இங்கே என் அட்டவணையில், நான் காமன்வெல்த் நாடுகள், சந்திப்பில் பங்கெடுக்கத் தேவையாக இருக்கிறது.  சார்லஸ் இளவரசரின் இந்திய வருகை, இந்தியாவுக்கான பெருமை.  கடந்த முறை மால்டாவில் நடந்த காமன்வெல்த் நாடுகள் மாநாட்டுக்கு என்னால் செல்ல முடியவில்லை.  இந்த முறை சார்ல்ஸ் இளவரசரே வந்திருந்தார், இந்த முறை நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ள அவரே, நேரடியாக வந்திருந்தார்.  (கைத்தட்டல்)

இதுமட்டுமல்ல, இதுமட்டுமல்ல. அரசியார் தம் கைப்படவே தனிப்பட்ட கடிதம் ஒன்றில் இந்த முறை, நீங்கள் இங்கே தங்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.  இது மோடி பற்றியது அல்ல.  இது பாரதத்தின் மகத்துவம், இதன் காரணமாகவே இப்படி நடந்திருக்கிறது.  மனித நேய விஷயங்கள் குறித்துப் பேசப்படும், பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளை ஒட்டியே அமைந்திருக்கும், ஆனால் பாரதம் பற்றிய பேச்சு இடம் பெறாது.

ஆனால் ஏமன் நாட்டில், 5000, 6000 பேர்  சிக்கிக் கொண்ட வேளையில், அவர்களை மீட்டெடுத்த போது, உலகத்தின், பல நாடுகள் நம்மிடம் விண்ணப்பித்தார்கள். நீங்கள் உங்கள் குடிமக்களை விடுவிக்கும் வேளையில், எங்கள் குடிமக்களையும் ஏமனிலிருந்து விடுவியுங்கள். உலக நாடுகளின் 2000 குடிமக்களை மீட்டெடுத்து, அவர்கள் நாடுகளிடம் ஒப்படைத்தோம்.  (கைத்தட்டல்) மக்கள் ஒலி

நம்முடைய, ராஜா ரந்தி தேவர் கூறியிருக்கிறார், மிகவும் சிறப்பான கருத்து. ராஜா ரந்தி தேவருடையது. அரச பரம்பரையைச் சேர்ந்த அவர் என்ன கூறினார் என்றால், नकामम न राज्यम न पुनर्भवम्, कामयेदुक्तानाम प्राणिनामार्थिनाशनम् । எனக்கு ராஜ்யத்தின் மீதோ மோக்ஷத்தின் மீதோ ஆசையில்லை, नकामम न राज्यम எனக்கு மோட்சத்தின் மீதும் நாட்டமில்லை.  नकामम न राज्यम न पुनर्भवम्, कामयेदुक्तानाम प्राणिनामार्थिनाशनम् । என் மனதில் ஆசை என்றிருந்தால், நான் துக்கத்தில் பரிதவிக்கும் ஏழைகளுக்குச் சேவை செய்வது ஒன்று தான் என் ஆசை. இந்த ஆசையை மனதில் தாங்கி நாம் பயணிப்போம். (கைத்தட்டல்) மக்கள் ஒலி

தமிழ் வடிவம், குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
(ஆலிண்டியா ரேடியோ, சென்னை வானொலி நிலையம்)

23.4.2018 அன்று வானொலியில் ஒலிப்பரப்பான தமிழ் வடிவம்… ..

லண்டன் வெம்ப்ளி ஸ்டேடியத்தில், பிரதமர் நரேந்திர மோடி  ஆற்றிய உணர்ச்சிப் பெருக்கான உரை… 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe