காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக அளித்த தீர்ப்பை செயல்படுத்த மேலும் 2 வாரம் கால அவகாசம் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
காவிரி விவகாரத்தில் பிப்ரவரி 16ம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பின் போது ‘ஸ்கீம்’ ஒன்றை செயல்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசு வழக்கம் போல், காவிரி தொடர்பில் உள்ள நான்கு மாநிலங்களுடன் கூட்டங்களையும் ஆலோசனைகளையும் நடத்தியது. ஆனால், ஸ்கீம் ஒன்று அமைப்பதற்கான தொடர்பில் உச்ச நீதிமன்றம் விதித்த காலக் கெடு மார்ச் 29ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய மத்திய அரசு, ஸ்கீம் என்பதன் தெளிவான விளக்கத்தை அளிக்கும் படி கோரியது.
ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியமா என்பது குறித்து விளக்கம் கேட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம், ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியம் அல்ல, அதுவும் அடங்கியது என்று கூறி, மேற்பட்ட விளக்கங்களை பின்னர் கூறுவதாகத் தெரிவித்தது.
அப்போது “உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள ‘ஸ்கீம்’ என்பதன் பொருள், காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தால், அதனை உருவாக்க கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என்றும், கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்கிற வார்த்தைக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்பது பொருள் அல்ல. அது காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு தரக்கூடிய மற்ற அம்சங்களையும் உள்ளடக்கியது. எனவே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் முழுவதும் கிடைக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்” என வாய்மொழியாக தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணைக்கு வந்த போது மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேலாண்மை திட்டத்தை தயாரித்து வரைவு திட்டத்தை மே 3-ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
உச்ச நீதிமன்ற காலக்கெடு முடிவடைய சில நாட்களே உள்ள நிலையில் மத்திய அரசின் சார்பில் புதிய மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், காவிரி வழக்கின் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் போதவில்லை, வரைவு திட்ட அறிக்கையை தயார் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் தேவ என கோரப்பட்டுள்ளது.
மே 3ஆம் தேதி காவிரி வழக்கு விசாரணைக்கு வரும் போது, இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர். இந்நிலையில் மத்திய அரசின் கால அவகாச நீட்டிப்பு கோரிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.