காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளரான நடிகை ‘குத்து’ ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா மீது உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது.
நடிகை ரம்யா தற்போது காங்கிரஸ் கட்சி சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளராக இருந்து வருகிறார். அண்மையில் காங்கிரஸ் உள்ளிட்ட 6 கட்சிகள் சேர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் நோட்டீஸை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் அளித்தனர்.
அந்த தீர்மான நோட்டீஸ் சட்ட வல்லுநர்களின் அறிவுறுத்தல்படி வெங்கய்ய நாயுடுவால் நிராகரிக்கப் பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக கூறியது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி சமூக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ரம்யா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து அவதூறுக் கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்பினார். இதனை அடுத்து, வழக்கறிஞர் பருண் குமார் சின்ஹா என்பவர் ரம்யா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், டிஒய் சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வில், அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுக்க மனுவில் கோரப்பட்டு இருந்தது. அதற்கு அனுமதி மறுத்த நீதிபதிகள் வழக்கமான அலுவல்படி வழக்கு விசாரணைக்கு வரும் எனத் தெரிவித்தனர்.