
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூருக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செல்லும் வழியில் திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி காட்டி அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டுப் பெற்றனர் திமுக.,வினர்.
ஆனால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் வழியில் கற்களை வீசி காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குவது, செருப்பு வீச்சு போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் பார்த்திபனூரில் இதனால் அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியவை…
“நாடு முழுவதும் மிகவும் பிற்படுத்தப்பட்ட 115 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு மத்திய அரசு சார்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நான் வந்துள்ளேன்.
காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது. மற்ற மாநிலங்களைக் கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுக்கப் படும். இதனை நீதிமன்றத்தின் மூலமே தெரிவிப்போம்.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக., உள்ளிட்ட கட்சிகள் அப்போது இருந்தன. அப்போது ஏன் வாரியம் குறித்து கேள்வி எதுவும் எழுப்பப் படவில்லை? என்று கேள்வி எழுப்பினார் நிர்மலா சீதாரானம்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராமநாதபுரம் மாவட்டத்தின் கிராமத்தில் தங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்திகள் வெளியாகின. அதற்கு, பின்னூட்டம் இட்ட திமுக.,வினர், மிக மோசமான விமர்சனங்களை முன் வைத்தனர். இதனால் கிராமத்தில் தங்கும் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களில் இயங்குபவர்கள் சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமான தகவல்களைப் பரப்பி, பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன்,மத்திய அரசின் திட்டங்கள் கிராமங்களுக்கு சென்று சேர்ந்துள்ளதா என ஆய்வு செய்ய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில் 115 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஆய்வு செய்ய தாம் வந்துள்ளதாகவும் கூறினார். அந்த வகையில் அவர் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பயணம் செய்கிறார். நாளை விருதுநகர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு, பல்வேறு நலத்திட்டங்கள் வழங்க உள்ளார்.
திமுக.,வின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டி, கேள்வி கேட்ட நிர்மலா சீதாராமனுக்கு ஜனநாயக முறையில் கருப்புக் கொடி காட்டுகிறோம் என்று அனுமதி வாங்கி, கல் வீச்சு செருப்பு வீச்சில் வழக்கம் போல் வன்முறை கோர முகத்தை திமுக., குண்டர்கள் காட்டியிருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



