காவிரி விவகாரத்தில் என்ன செய்தது மத்திய அரசு என்பது பற்றி பிரமாணபத்திரம் தாக்கல் வேண்டும். கர்நாடகாவில் தேர்தல் என்பதையெல்லாம் நாங்கள் ஏற்கமுடியாது.காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க மாட்டோம்
என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இன்று விசாரணையில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய 10 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்குமாறு கோரினார். பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் கர்நாடக மாநில பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருவதால் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் வாங்க முடியவில்லை வரைவு திட்டம் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கவேண்டிய நீரின் அளவை குறைத்து கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. என்றாலும், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) ஒன்றை 6 வாரத்துக்குள் ஏற்படுத்துமாறும் அந்த தீர்ப்பில் உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு விதித்த 6 வார கால கெடுவரை அமைதி காத்த மத்திய அரசு, மார்ச் மாத இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் “ஸ்கீம்” என்பதற்கு விளக் கம் கோரியும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ள செயல்திட்டத்தை அமல்படுத்த மேலும் 3 மாதங்கள் அவகாசம் கேட்டும் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தாமல் காலம் கடத்துவதாக தமிழக அரசு தரப்பில் மத்திய கேபினட் செயலாளர் மற்றும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்குக்கான மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோல் புதுச்சேரி அரசு கொறடா ஆர்.கே.ஆர் அனந்தராமன் தரப்பில் மத்திய அரசுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தாமதமின்றி அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி புதுச்சேரி அரசு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நான்கு மனுக்களும் கடந்த மாதம் 9-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, மே 3-ந் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வரைவு செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், “எப்படி இருந்தாலும் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற உள்ளத்தால், இடைக்கால மனுவை விசாரிக்க முடியாது. என்று கூறி மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.