புது தில்லி: அண்மையில் உச்ச நீதிமன்றம் எஸ்சி.,எஸ்டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பிறப்பித்த உத்தரவுக்கு, தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தெரிவித்துவிட்டது.
எஸ்சி., எஸ்டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் தாங்கள் அண்மையில் பிறப்பித்த உத்தரவுக்கு, திருத்தம் செய்யவோ தடை விதிக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் எந்த ஒரு நபரையும் விசாரணையின்றி உடனடியாகக் கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், எந்த வித விசாரணையுமின்றி, ஒருவரை உடனடியாகக் கைது செய்வதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்து வட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரி, மத்திய அரசும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களும் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இந்தத் தீர்ப்பு முழுமையான பாதுகாப்பு அளிக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், தங்கள்து தீர்ப்பில், எப்.ஐ.ஆர் பதிவு செய்வதைத் தடுக்கவில்லை என்றும், விசாரணை ஏதுமின்றி உடனடியாக ஒருவரைக் கைது செய்வதற்குத் தான் தடை விதித்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் விளக்கமாகத் தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு தமிழகத்தில் பாமக., வரவேற்பு தெரிவித்திருந்தது.




