15-ஆவது ஆசிய ஊடக உச்சி மாநாடு (AMS 2018) இன்று முதல் வரும் 12ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை டெல்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்பு கல்விக் கழகம், இந்திய ஒலிபரப்புப் பொறியியல் ஆலோசகர்கள் குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகம் நடக்க உள்ளது.
இன்று நடைபெறவுள்ள தொடக்க விழாவில் மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். கோலாலம்பூரில் உள்ள ஆசியா-பசிஃபிக் ஒலிபரப்பு வளர்ச்சிக்கான நிறுவனத்தின் ஆண்டு உச்சி மாநாடு இப்பிராந்தியத்தில் பெருமைமிக்க ஒன்றாகும். இந்த நிகழ்வை இந்தியா முதன்முறையாக நடத்துகிறது.
“எங்கள் கதைகளைச் சொல்கிறோம் – ஆசியாவிலும், அதற்கு மேலும்” என்ற மையக் கருத்துடன் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வங்கதேச செய்தித் துறை அமைச்சர் ஹஸனுல் ஹக் இனு, கம்போடியா செய்தித் துறை அமைச்சர் கியூ கான்ஹரித் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 39 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் கொள்கைகள், நெறிமுறைகள், விதிமுறைகள், சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
மாநாட்டின் நிறைவு அமர்வில் 2018-ஆம் ஆண்டிற்கான உலகத் தொலைக்காட்சி விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் வழங்கவுள்ளார்.



