கர்நாடக மாநிலத்தில் சட்டப் பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் இன்று வாக்குப் பதிவு ஓரளவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பெங்களூரு நகரப் பகுதியில் குறைவான அளவிலேயே வாக்குகள் பதிவாகி வருகின்றன. இருப்பினும் தென் கன்னடப் பகுதியில் அதிக அளவில் வாக்குப் பதிவு இருந்தது. ஆனால் வட கன்னடப்பகுதியில் வாக்குப் பதிவு மந்தமாக உள்ளது.
குறிப்பாக, வட கன்னடாவின் குல்பர்கா என்று முன்னர் அழைக்கப் பட்ட கலபுர்கி பகுதியில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. வாட்டும் வெயிலுக்கு அஞ்சி, மக்கள் தலைகாட்டவே தயங்கி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். கலபுர்கியில் இன்று காலை 43 டிகிரி வெயில் கொளுத்தி எடுக்கிறது.
இது குறித்து உள்ளூர் மக்கள் தெரிவித்த போது, வெயில் கொடுமையால் நாங்கள் காலையிலேயே வாக்குச் சாவடிக்கு வந்து பார்த்தோம். ஆனால், கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, வெயிலும் கடுமையாக இருந்தது. எனவே திரும்பிவிட்டோம்.
இப்போது கூட்டம் இல்லை என்றாலும் வாகுச் சாவடிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பெரும்பாலானவர்கள் இந்த வெயிலில் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். இப்போது கூட 40 டிகிரிக்கும் அதிகமாக வெப்ப நிலை உள்ளது. மாலை வாக்குப் பதிவு முடியும் நேரத்தில் ஓரளவு மக்கள் வந்து வாக்களிக்கக் கூடும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.




