ஆட்சி அமைக்க உரிமை கோரிவிட்டோம். இனி முடிவெடுப்பது ஆளுநர் கையில்தான் உள்ளது என்று காங்கிரஸ், மஜத., இரு கட்சியினரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தொங்கு சட்டமன்றமே அமையும் என்று கணித்தபடியே, இழுபறி நிலையாக அமைந்துவிட்டது. இதில் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும் பாஜக., ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெறவில்லை.
இதனால், 37 தொகுதிகளைப் பெற்றுள்ள குமாரசாமியின் மஜத., ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளில் வென்றுள்ள போதும், அதனிலும் பாதி அளவு பெற்றுள்ள மஜத., ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது, பாஜக.,வை எக்காரணம் கொண்டும் ஆட்சி அமைக்க விடக் கூடாது என்ற அரசியல் நிலைப்பாடால்தான்.
முன்னதாக, ஆட்சி அமைப்பது தொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகௌடவுடன், தாமாக முன்வந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வராக குமாரசாமியை முன்னிறுத்த அவர்கள் கூறியதும், இந்தக் கூட்டணி ஆட்சிக்கு தேவேகௌடவும் ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில், நாங்கள் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிவிட்டோம். இனி முடிவெடுப்பது ஆளுநர் கையில் உள்ளது என்று இரு கட்சித் தலைவர்களும் கூட்டாகத் தெரிவித்தனர்.
மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி ஆளுநரைச் சந்தித்து, தங்களுக்கு 116 உறுப்பினர் ஆதரவு உள்ளதாகவும், தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும் கோரினார். அவருடன் பின்னர் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா மூவரும் இணைந்து, கூட்டாக ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் மூவரும் கூறியபோது…
கோவா போல் குறுக்கு வழியில் ஆட்சியமைக்க கர்நாடகாவிலும் பாஜக முயற்சி செய்கிறது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெற விட மாட்டோம் என்றார் சித்தராமையா.
‘ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்துடன், காங்கிரசின் ஆதரவு கடிதத்தையும் கொடுத்துள்ளேன் என்று குமாரசாமி கூறினார்.
ஆட்சியமைக்க உரிமை கோரப்பட்டு விட்டது. இனி முடிவெடுப்பது ஆளுநர் கையில் உள்ளது என்றார் பரமேஸ்வரா.
முன்னதாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், பெங்களூரிலேயே தங்கியிருந்து, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். சோனியா காந்தியின் அறிவுறுத்தலின் பேரில், குமாரசாமியை முதல்வர் ஆக்க பேச்சுவார்த்தை நடத்தி, தேவேகவுடவைக் கவிழ்க்க ஏற்பாடு செய்ததும் அவர்தான்!
தற்போதைய நிலையில், எங்கே கட்சியில் இருந்து சிலர் சென்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில், கட்சியினரை பாதுகாப்பாக பத்திரப் படுத்தும் வேலைகளை இரு கட்சியினருமே மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




