ஆளுங்கட்சியாகவே இருந்து அனுபவப்பட்டுவிட்ட காங்கிரஸ், கர்நாடகத்தில் தற்போது மீண்டும் ஒரு சதிவலையை உருவாக்கி இருக்கிறது. தங்களை கர்நாடக மக்கள், ஆட்சியில் இருந்து இறக்கிவிட்ட பிறகு, மக்கள் கருத்துக்கு மாறாக ஆட்சியில் அமர ஒரு சதிவலையை அரங்கேற்றி வருகிறது. காங்கிரஸுடன் எக்காலத்திலும் இனி கூட்டணி இல்லை என்று கூறி வந்த மஜத., குமாரசாமிக்கு முதல்வர் பதவி ஆசை காட்டியதும், உடனே அந்த குறிக்கோள், வாக்குறுதி எல்லாவற்றையும் தூக்கிக் கிடாசி விட்டது. மஜத.,வில் குமாரசாமிக்கு முதன்மை கொடுக்கிறார் என்ற காரணத்தை வைத்து கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸில் இணைந்த சித்தராமையா, இப்போது குமாரசாமியையே முதல்வராக முன்னிறுத்தி எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்.
இந்தப் பின்னணியில், முன்னதாகவே களம் இறங்கி ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா. சட்டப் போராட்டங்களுக்கு உட்பட்டு, சனிக்கிழமை இன்று அவர் 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளார்.. இது குறித்து எடியூரப்பா வெள்ளிக்கிழமை நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சட்டசபையில் தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்; இதில் நூறு சதவீதம் நம்பிக்கையுடன் இருப்பதாக எடியூரப்பா கூறினார்.
முன்னதாக எடியூரப்பா பதவி ஏற்க தடை விதிக்க கோரி கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும், மஜத.,வின் குமாரசாமியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய இரு கடிதங்களை, அவரது சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி தாக்கல் செய்தார். அதன் நகல்கள் வழக்கு போட்டவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.
மேலும், எடியூரப்பா எழுதிய கடிதத்தில் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று முக்கியமான அம்சமாக அவர் குறிப்பிட்டு இருந்ததை முகுல் ரோத்தகி நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டினார். மேலும், காங்கிரஸ்-மஜத., சார்பில் ஆளுநருக்கு குமாரசாமி அளித்த கடிதத்தில் இடம் பெற்றிருந்த உறுப்பினர்களின் கையெழுத்து குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திங்கட்கிழமை வரை அவகாசம் வேண்டும் என்றும் கேட்டார். ஆனால் நீதிபதிகள் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.
இதனிடையே, குமாரசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, 15ஆம்தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவடைவதற்கு முன்பாகவே, எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது தெரியவருவதற்கு முன்பாகவே, தாங்கள் பெரும்பான்மை பெற்றதாகக் கருதி எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநனருக்கு கடிதம் எழுதியிருக்கக் கூடாது” என்று வாதிட்டார்.
அபிஷேக் சிங்வியுடன் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் கபில் சிபல், “காங்கிரஸ், மஜத., ஆதரவு உறுப்பினர்கள் கையெழுத்துக்களுடன் கடிதம் தரப்பட்ட நிலையில், ஆளுநர் தனது விருப்ப உரிமையை பயன் படுத்த முடியாது” என்று வாதிட்டார். காங்கிரஸ் மஜத., தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் ப.சிதம்பரம், ஆங்கிலோ இந்திய எம்.எல்.ஏ.க்கள் நியமன பிரச்னை, ஓட்டுரிமை குறித்து குறிப்பிட்டு வாதம் செய்தார்.
இத்தகைய வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கர்நாடக சட்டசபையை நாளை (இன்று) கூட்டி எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். சட்டப்படி தற்காலிக சபாநாயகர் ஓட்டெடுப்பை நடத்துவார்.
ஓட்டெடுப்பில் பங்கேற்க ஆங்கிலோ இந்திய சமூக உறுப்பினரின் நியமனம் கூடாது. ரகசிய ஓட்டெடுப்பு கூடாது. கைகளை உயர்த்தி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை தெரிவிக்கலாம். ஓட்டெடுப்புக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் டி.ஜி.பி.யும் அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும்.
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கிற வரையில், அரசாங்கம் பெரிய அளவிலான கொள்கை முடிவு எதையும் எடுக்கக்கூடாது. எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தது அரசியல் சாசனப்படி செல்லுமா என்பது பற்றி பின்னர் ஆய்வு செய்யப்படும்… – என்று கூறப்பட்டது.
கர்நாடக சட்டமன்றத்தில், தற்போதைய சூழலில் பாஜக.,வுக்கு 104 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக.,வுக்கு இன்னும் 7 பேர் ஆதரவு தேவைப்படுகிறது. காங்கிரசுக்கு 78 பேரும், மஜக.,வுக்கு 36 பேரும், பகுஜன் சமாஜ்க்கு ஒரு எம்.எல்.ஏ.வும், சுயேச்சைகள் இருவர் என 117 பேர் ஆதரவு இருப்பதாகக் கூறுகிறது காங்கிரஸ். இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்.எ.ஏக்கள் 78 பேரில், ஆனந்த்சிங், பிரதாப் கவுட பட்டீல் இருவரும் எங்கே இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. பாஜக.,வுக்கு ஆதரவாக உள்ள அவர்கள் இருவரும் இன்று சபைக்கு வர மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ.,வாக ஒரு கட்சியின் சார்பில் ஒருவர் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கு முன்னதாகவோ அல்லது கலந்து கொள்ளாமலோ இருந்தால், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்தால் போதும். அதைப் பொறுத்தே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எடியூரப்பாவுக்கு எத்தனை பேரின் ஆதரவு தேவை என்பது அமையும்.
இந்நிலையில், தங்கள் கட்சி உறுப்பினர்களை பாஜக., விலைபேசி இழுத்து விடாமல் தடுக்க அவர்களை காங்கிரஸ், மஜத., கட்சித் தலைவர்கள் ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைத்துள்ளனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தாஜ் கிருஷ்ணா விடுதியிலும், மஜத.,வினர் ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் உள்ள நோவோடெல் விடுதியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக அவர்களை கேரளத்தின் கொச்சிக்கு அழைத்துச்செல்வதாகக் கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த திட்டத்தை மாற்றி, ஐதராபாத்துக்கு பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், இன்று முற்பகல் 11 மணிக்கு சட்டசபை உறுப்பினர்களாகப் பதவி ஏற்கவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காகவும் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் பெங்களூருக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
இருப்பினும் காங்கிரஸ், மஜத.,வில் இருந்து 10 பேரின் ஆதரவை பாஜக., பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது. மைசூரு பகுதியில் மஜத., வேட்பாளர்கள் வெற்றி பெற்று, காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைய வேண்டும் என்பதற்காகவே, பாஜக., அங்கே பிரபலமில்லாத, தொகுதிக்கு அறிமுகமில்லாத வேட்பாளர்களை நிறுத்தி, பிரசாரத்தையும் பெரிதாகச் செய்யவில்லை. இதனால், மைசூரு பகுதியில் இருந்து தேர்வான மஜத., உறுப்பினர்கள் பாஜக.,வுக்கு ஆதரவு அளிக்கக் கூடும் என்று பரபரப்பு நிலவுகிறது.




