பெங்களூர்: கர்நாடகாவில் தற்காலிக அவைத்தலைவராக போப்பையா நியமிக்கப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பவும் ஆணை பிறப்பித்துள்ளது.
கர்நாடக சட்டசபையின் தற்காலிக அவைத் தலைவராக பா.ஜ.க, எம்எல்ஏ., போப்பையா நியமிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் சார்பில் வாதாடிய அபிஷேக் மனு சிங்வி, போப்பையாவுக்கு அனுபவம் கிடையாது. அவர் அவைத்தலைவராக இருந்தால் ஓட்டெடுப்பு சரியாக நடக்காது. இதற்கு முன் அவைத்தலைவராக இருந்து அவர் எடுத்த முடிவுகள் சர்ச்சையாகி உள்ளன என்று கூறினார்.
இதற்கு பதில்கேள்வி கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அப்படியானால் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்தி வைக்கலாமா என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, போப்பையாவை தற்காலிக அவைத்தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தரவிடுமாறு கோரிய விடுத்த காங்கிரஸின் கோரிக்கையை நிராகரித்தனர்.
மேலும் போப்பையாவை நீக்க உத்தரவிட முடியாது என்றும், போப்பையா தான் அவைத்தலைவராக இருந்து வாக்கெடுப்பை நடத்துவார். குறிப்பிட்ட நபரை அவைத் தலைவராக நியமிக்க பரிந்துரை செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்குக் கிடையாது என்றும் கூறினர்.
அடுத்து, நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை ஊடகங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யலாம் என்றும் வாக்கெடுப்பை வீடியோ பதிவும் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
மக்களிடம் நம்பிக்கை இழந்து, கர்நாடக ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப் பட்ட காங்கிரஸால், தங்களுக்கு ஏற்பட்ட நிலையை ஜீரணிக்க இயலாமல், அனைத்து வழிகளையும் கையாண்டு, பாஜக.,வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு ஏற்பாடு செய்துவருகிறது. இது கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், மஜத., காங்கிரஸ் மீது வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




