புது தில்லி :
விவசாயிகளுக்காக கடந்த 2007-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய கொள்கையை மறுஆய்வு செய்வது தொடர்பாக தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கத் தவறியதற்காக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்தது.
இதுதொடர்பாக பஞ்சாப் மாநிலத்தில் இயங்கிவரும் தன்னார்வ அமைப்பின் தலைவர் ஜி.எஸ்.ஹேப்பி மான் என்பவர் பொது நல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
“விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும். விவசாயிகளுக்காக மத்திய அரசால் கடந்த 2007ல் அறிவிக்கப்பட்ட தேசியக் கொள்கையை மறு ஆய்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தனது நிலைப்பாடு குறித்து 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்றம் அளித்த காலக் கெடுவுக்குள் அறிக்கை தாக்கல் செய்யத் தவறியதால் மத்திய அரசுக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.



