சென்னை:
மது ஒழிப்புக்காக “டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலைப் பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஏழாவது மனிதன் திரைப் படத்துக்காக தமக்கு அளிக்கப்பட்ட தேசிய விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.
“மூடு டாஸ்மாக்கை..!” என மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தை கையிலெடுத்து வரும் ம.க.இ.க., வின் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதில், “மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு, இன்னும் எத்தனை பிள்ளைகள் குடிச்சி சாகணும், எத்தனை தாலிகள் அறுக்கணும், மூடு டாஸ்மாக்கை மூடு” எனும் பாடலை வெளியிட்டு, திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் வீதி நாடகமாக நடத்தி வந்தார்கள்.
இந்நிலையில், இந்தக் குழுவைச் சேர்ந்த கோவனை, திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சென்னை கொண்டு வரப்பட்டார். அவர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது..
இந்நிலையில் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திரும்பத் தருவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அருண்மொழி.
அவரின் இந்த அறிவிப்பு, கோவன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக கலைஞர்களிடமிருந்து கிளம்பி உள்ள முதல் எதிர்ப்பு என்று கருதப் படுகிறது. அவரின் இந்த அறிவிப்புக்கு சில எழுத்தாளர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
கோவன் கைதுக்கு எதிரான போராட்டத்திற்கு இது ஒரு முன்னெடுப்பு என்று பலர் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.



