ராமேஸ்வரம்:
தில்லி ராஜாஜி மார்க் பங்களாவில் இருந்த இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடைமைகள் 204 பெட்டிகளில் ராமேஸ்வரம் வந்தன.
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தில்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தார். அவர் மரணம் அடைந்த பிறகு அந்த பங்களாவை அக்டோபர் 31ம் தேதிக்குள் காலி செய்யுமாறு மத்திய அரசு அவரின் உதவியாளர்களுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து பங்களாவில் இருந்த கலாமின் உடைமைகள் 204 பெட்டிகளில் வைக்கப்பட்டு, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றில் கலாம் பயன்படுத்திய புத்தகங்கள் இருந்தது. அந்த பெட்டிகள் 27ம் தேதி ராமேஸ்வரம் வந்தது. பெட்டிகளை பெற்றுக் கொண்டதாக அவரின் உறவினர் ஷேக் சலீம் தெரிவித்துள்ளார்.
கலாம் வசித்த பங்களாவை அவரது நினைவிடமாக மாற்றுமாறு எழுந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்ட நிலையில் அந்த பங்களா மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




