மும்பை:
மும்பை பெண் பொறியாளரை கற்பழித்துக் கொன்ற ஓட்டுநருக்கு தூக்கு தண்டனை விதித்து மும்பை மகளிர் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியது.
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தை சேர்ந்தவர் சுரேந்திர பிரசாத். ஆந்திரா பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர். இவரது மகள் எஸ்தர் அனுயா (23). கணினி மென்பொருள் பொறியாளர். இவருக்கு மும்பை கோரேகாவில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதனால் மும்பை வந்த அவர் அந்தேரி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த எஸ்தர் அனுயா கடந்த 2014 ஜனவரி 4ஆம் தேதி விஜயவாடாவில் இருந்து மும்பைக்கு ரயிலில் திரும்பினார். மறுநாள் அதிகாலை மும்பை வந்த அவர் திடீர் மாயமானார்.
இதனால் பதற்றம் அடைந்த அவரது தந்தை சுரேந்திர பிரசாத் மும்பை வந்து போலீசில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் எஸ்தர் அனுயா மாயமான 11 நாட்களுக்கு பிறகு மும்பை பாண்டு பகுதியில் உள்ள ஓடை அருகே அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது. பிரேத பரிசோதனையில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் 2 மாதத்திற்கு பிறகு சந்திரபான் சனப் (29) என்பவர் பிடிபட்டார்.
இவர் துவக்க காலத்தில் லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக வேலை பார்த்தவர். பின்னர் நாசிக்கில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தது தெரியவந்தது.
கைதான சந்திரபான் சனப் 3 திருமணங்களை செய்தவர். அவரது முதல் மனைவி இறந்து விட்டார். 2–வது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதைத் தொடர்ந்து 3–வது மனைவியுடன் நாசிக்கில் வசித்து வந்த அவர், அங்கு ஓட்டுநராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மனைவியுடன் சண்டையிட்டு மும்பையில் உள்ள தாய் வீட்டுக்கு வந்த அவர், லோக்மான்ய திலக் ரயில் நிலையம் சென்றார்.
அப்போது அங்கு ரயிலில் இருந்து இறங்கிய எஸ்தர் அனுயாவிடம் தன்னை டாக்சி ஓட்டுநர் என்று அறிமுகப்படுத்தினார்.
இதை நம்பிய எஸ்தர் அனுயா அவருடன் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு டாக்சி இல்லை. ரூ.300 தந்தால் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று விடுதியில் விடுவதாகத் தெரிவித்தார். இது எஸ்தர் அனுயாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அப்போது நைசாக பேசி எனது மோட்டார் சைக்கிள் நம்பரை வேண்டுமானால் குறித்து கொள்ளுங்கள், உங்களது தந்தைக்கு வேண்டுமானாலும் போனில் தகவல் சொல்லிவிடுங்கள் என்று சொன்னார்.
இதனால் அவர் மீது எஸ்தர் அனுயாவிற்கு நம்பிக்கை ஏற்பட்டது. பின்னர் சந்திரபான் சனப்புடன் அவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை அவர் கிழக்கு விரைவுச்சாலையில் புறநகரான பாண்டுப் பகுதிக்கு ஓட்டிச் சென்று அங்குள்ள ஓடை அருகே நிறுத்தினார்.
பின்னர் அங்கு புதருக்குள் அவரை கொடூரமாக கற்பழித்து விட்டு, துப்பட்டாவில் கழுத்தை இறுக்கிக் கொன்றார். உடல் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக மோட்டார் சைக்கிள் டேங்கரில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு தப்பினார்.
போலீஸாரின் விசாரணையில் சந்திரபான் சனப் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் மும்பை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி விருஷாலி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கு அரிதிலும் அரிதானது என்பதால், குற்றவாளி சந்திரபான் சனப்பிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி விருஷாலி தீர்ப்பு கூறினார்.



