மும்பை:
மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
மும்பை சிவாஜி பார்க் அருகே மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவின் வீட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் நேற்று காலை 9.30 மணி அளவில் திடீரென வருகை தந்தார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு ராஜ் தாக்கரே மற்றும் அவரது குடும்பத்தினர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வரவேற்றனர். பின்னர் நடிகர் கமல்ஹாசன், ராஜ் தாக்கரேவுடன் சுமார் 25 நிமிடங்கள் தனியாக பேசினார். இதையடுத்து கமல்ஹாசன், ராஜ் தாக்கரே மற்றும் அவரது குடும்பத்தினருடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார். பின்னர் அங்கிருந்து கமல்ஹாசன் புறப்பட்டுச் சென்றார்.
ராஜ் தாக்கரேவுடனான இந்த திடீர் சந்திப்பு குறித்து கமல்ஹாசனிடம் கேட்டபோது, ‘‘ராஜ் தாக்கரே என் நீண்ட கால நண்பர். நட்பு ரீதியாகவே அவரை சந்திக்க வந்தேன்’’ என்றார். இந்த சந்திப்பின் போது நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனும் உடன் இருந்தார்.



