விமான நிலையத்தின் அருகே ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு பெண் உள்பட 23 பேர் உயிரிழந்த்த சம்பவம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்று உள்ளது.
நாடு கடத்தப்பட்ட ஈரானிய குழுவின் முகாம் பாக்தாக் விமான நிலையத்தில் உள்ளது. அந்த முகாமை குறிவைத்து நேற்று ராக்கெட் வீச்சு நடந்துள்ளது. 15 ராக்கெட்டுகள் விழுந்ததில், முகாமில் தங்கி இருந்தவர்களில் ஒரு பெண் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த ராக்கெட்டுகள், பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து 6 கி.மீ. வட கிழக்கே உள்ள பாக்ரியா புறநகரில் இருந்து வீசப்பட்டுள்ளன. இந்த ராக்கெட் வீச்சு குறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பலியானவர்கள் குறித்த விவரம் தரப்படவில்லை.
இந்த ராக்கெட் தாக்குதல் தொடர்பாக ஈராக் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, படுகாயம் அடைந்தவர்களுக்கு எல்லா மருத்துவ உதவியும் வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த முகாமுக்கு பாதுகாப்பினை அதிகரிக்கும்படி ஈராக் அரசிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என ஏஜென்சி செய்திகள் கூறுகிறது.



