சென்னை:
சென்னையில், உடல்நலக் குறைவால் மகள் இறந்த சோகத்தில், தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டனர். பூட்டிய வீட்டுக்குள் கிடந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
சென்னை கொருக்குப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கத்தின் மனைவி சகுந்தலா(50). இவர்களுக்கு சரவணன்(30) என்ற மகனும், கிருஷ்ணவேணி(27) என்ற மகளும் இருந்தனர். சங்கரலிங்கத்தின் சொந்த ஊர் தூத்துக்குடி. 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரலிங்கம் உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார்.
சகுந்தலா தனது மகன், மகளுடன் அப்பகுதியில் வசித்து வந்தார். கிருஷ்ணவேணிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் அவருக்கு திருமணம் ஆகாமலேயே இருந்தது. இதனால் சரவணனும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 3 நாட்களாக சகுந்தலாவின் வீடு பூட்டியே இருந்துள்ளது. நேற்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே, அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து, கொருக்குப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சகுந்தலாவும், சரவணனும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தனர். கிருஷ்ணவேணி தரையில் பிணமாக கிடந்தார். அவரது உடலைச் சுற்றி எறும்பு வராமல் இருப்பதற்காக எறும்புப் பொடி போடப்பட்டு இருந்தது.
இதை அடுத்து மூவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில மாதங்களாக கிருஷ்ணவேணி உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்தும் பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சகுந்தலாவும், சரவணனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
ஒரே குடும்பத்தில் 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



