கோபால்கஞ்ச்:
பீகாரில் மீண்டும் காட்டாட்சி மலர வேண்டும் என முதல்வர் நிதிஷ் குமார் விரும்புகிறாரா?’’ என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 4ஆம் கட்ட பிரசாரத்தில் அனல் பறக்கிறது.
மெகா கூட்டணிக்கும், தேசிய ஜனதா கூட்டணிக்கும் இடையே வார்த்தைப் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. பீகாரில் பாஜ தோற்றால், பாகிஸ்தானில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள் என பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா நேற்று முன் தினம் கூறியதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதை கடுமையாக விமர்சனம் செய்த கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் கரத், ‘‘பாகிஸ்தானில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடுவார்கள்’’, என்று பாஜவை கடுப்பேற்றி உள்ளார்.
இந்நிலையில், லாலுவின் சொந்தத் தொகுதியான கோபால்கஞ்ச் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: பீகாரில் மீண்டும் பழைய நிலை திரும்பும் என்று நிதிஷ் கூறுகிறார். பழைய நிலை என்று நிதிஷ் எதை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. கடத்தலும், கொள்ளையும், பெண்கள் இழிவு படுத்தப்படுவதும், ரயில் நிலையங்களில் ஓயாத துப்பாக்கி சப்தமும் நீடித்து வந்த லாலுவின் காட்டு ராஜ்ஜிய ஆட்சியைத்தான் நிதிஷ் மீண்டும் விரும்புகிறாரா?
இந்த மண்டலம் குட்டி சம்பல் பள்ளத்தாக்காக இருந்ததே அதை விரும்புகிறாரா? கடந்த 2005ம் ஆண்டு முஸ்லிம்கள் இடஒதுக்கீடு பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய நிதிஷ் குமார், அதை நிறைவேற்றினாரா? குற்றம் நிரூபிக்கப்பட்ட ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து பள்ளி தொடங்குவோம் என்று கூறும் நிதிஷ், ஊழலுக்காக தண்டனை விதிக்கப்பட்ட லாலுவின் வீட்டை ஏன் பறிமுதல் செய்யாமல் அவருடன் கூட்டு வைத்துள்ளார்? மாநிலத்தை கூறுபோட்டு விற்க, இருவரும் முடிவு செய்துவிட்டனர். இதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது. காசு கொடுத்தால் பீகார் மக்களை யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம்.
அது அவர்கள் ரத்தத்தில் ஊறியது என்று நிதிஷ் கூறுகிறார். தனது மக்களின் மரபணு பற்றி நிதிஷ் இப்படிப் பேசுவது முறையற்றது. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். ஆனால் தோல்வி பயத்தில், வாய்க்கு வந்தபடி நிதிஷ் பேசக்கூடாது. காட்டு ராஜ்ஜியம் வேண்டும் என்று நிதிஷ் வேண்டுமானால் கருதலாம். ஆனால் பீகார் மக்கள் அதை விரும்பவில்லை. பாஜ ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு உறுதியளிக்கிறோம். மாநிலத்தை 60 ஆண்டுகளாக கொள்ளையடித்த சின்னதம்பி, பெரியதம்பி ஆகிய இருவருக்கும் இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். என்று மெகா கூட்டணியை தாக்கிப் பேசினார்.
பீகார் மாநிலத்திற்கு வந்த வெளியாள் என்று தன்னை விமர்சனம் செய்த நிதிஷ்குமாருக்கு மோடி காட்டமாக பதிலடி கொடுத்தார். இது பற்றி அவர் கூறுகையில், ‘‘ நான் என்ன பாகிஸ்தான், இலங்கை அல்லது வங்க தேசத்தின் பிரதமரா? இந்நாட்டு மக்கள் என்னை இந்தியப் பிரதமராக தேர்வு செய்துள்ளனர். பீகாரும் இந்தியாவின் ஒரு அங்கம்தான். நான் எப்படி வெளியாள் ஆக முடியும்? என்னை வெளியாள் என்று கூறும் நிதிஷ்குமார், பீகாரில் பிறக்காத சோனியா காந்தியை என்னவென்று கூறுவார்?’’ என்றார்.



