பீகாரில் பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
பீகாரில் புதிய அரசை அமைப்பதற்கான தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர்களைக் கவரும் விதமாக பா.ஜ.க. இரண்டு விளம்பரங்களை வெளியிட்டது.
ஆனால் பா.ஜ.க. வின் இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்று பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து இரண்டு விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் பா.ஜ.க.வின் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்திருப்பது மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று ராஷ்ட்ரீய ஜனதா தள் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜூகா கூறுகையில், “பா.ஜ.க.வின் விளம்பரம் குறித்து நேற்று தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தோம். எங்களது புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து விளம்பரத்தை தடை செய்திருப்பது பீகார் மக்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றி தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான வெற்றி” – என்று அவர் தெரிவித்தார்.



