கர்நாடக மாநில தேர்தல் முடிந்த பின்னர், தொடர்ந்து விலை ஏற்றம் கண்டு வந்த பெட்ரோல் விற்பனை விலை, இன்று சற்று இறக்கம் கண்டது. விலைக்குறைப்பில், லிட்டருக்கு 60 பைசா வரை குறைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டு, திடீரென பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு வெறும் ஒரு காசு மட்டுமே குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில், பெட்ரோல் லிட்டருக்கு 60 காசுகளும், டீசல் 59 காசுகளும் குறைக்கப்பட்டதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. ஆனால், கணக்கீடு செய்வதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அந்த விலைக் குறைப்பை வாபஸ் பெற்றுக்கொண்டு, திருத்தப்பட்ட விலையை தற்போது அறிவித்துள்ளது.
இதன்படி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒரு காசு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதியில் இருந்து நாள் ஒன்றுக்குச் சராசரியாக லிட்டருக்கு 25 முதல் 30 காசுகள் வரை உயர்த்தி வந்தன. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பேரல் 80 டாலருக்கும் அதிகரித்துள்ளதால், வேறுவழியின்றி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
இப்படி தொடர்ச்சியாக உயர்ந்து வந்த விலை ஏற்றத்தின் படி, கடந்த இரு வாரங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.80 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ. 9.30 காசுகளும் உயர்ந்தன.
இந்நிலையில் 14 நாட்களுக்குப் பின் இன்று பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 60 காசுகள் குறைத்து ரூ.77.83 ஆகவும், டீசல் லிட்டருக்கு 56 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.68.75 ஆகவும் அறிவித்தன. ஆனால், அடுத்த ஒரு மணிநேரத்தில் அந்த விலைக் குறைப்பு தவறானது, கணக்கீடு செய்வதில் தவறு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த எண்ணெய் நிறுவனங்கள் அந்த விலைக் குறைப்பை வாபஸ் பெற்றுக் கொண்டு, பெட்ரோல், டீசல் இரண்டிலும் லிட்டருக்கு ஒரு காசு குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன.




