ஐஎன்எக்ஸ்., மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஜூலை 3ஆம் தேதி வரை கைது செய்வதற்கு தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்திராணி முகர்ஜி , பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீட்டைப் பெற 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒப்புதல் அளித்ததைவிட அதிகமான அளவில் ரூ. 305 கோடிக்கு நேரடி அன்னிய முதலீடாக ஐஎன்எக்ஸ் மீடியா திரட்டியது
ஐஎன்எக்ஸ் மீடியாவின் விதி மீறலைக் கண்டுகொள்ளாமல் இருக்க சிதம்பரத்தின் மகன் கார்த்திக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா மூன்றரை கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் சிபிஐ பிப்ரவரி மாதம் கார்த்தியைக் கைது செய்து விசாரித்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை சிபிஐ கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி சிதம்பரம் நேற்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜூலை 3ஆம் தேதி வரை சிதம்பரத்தைக் கைது செய்யத் தடை விதித்துள்ளது.
ஒரு முன்னாள் மத்திய நிதி அமைச்சர், தான் கைது செய்யப் படுவதில் இருந்து தப்பிக்க, நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறும் அளவுக்கு இந்த முறைகேட்டு வழக்கில் துரத்தித் துரத்தி காய் நகர்த்தியதற்காக சுப்பிரமணியம் சுவாமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.




