கர்நாடக அமைச்சரவை தொடர்பாக காங்கிரஸ் மஜத., இடையே உடன்பாடு எட்டப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என மஜத., தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத., கூட்டணி அரசு பதவியேற்றது. மஜத., தலைவர் குமாரசாமி, கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார். ஆனால், அமைச்சரவை தொடர்பாக இரு கட்சிகள் இடையே உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்தது. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல், அஷோக் கேலோட் மற்றும் கே.சி.வேணுகோபால் அடங்கிய குழு மஜத கட்சியுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டு வந்தது.
இதில் குறைந்தபட்ச பொதுக் கொள்கை முடிவு ஏற்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் அமைச்சரவை அமையவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஐந்து முறை நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள், லண்டனுக்கு சோனியா காந்தியின் மருத்துவப் பரிசோதனை தொடர்பாகச் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் தெரிவிக்கப்பட்டு, காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தியதாம்.
மஜத.,வுக்கு நிதி, மருத்துவம், கல்வி, விவசாயம், வருவாய்த்துறை ஆகியன ஒதுக்கப்படவுள்ளதாம். உள்துறை, உயர்கல்வித்துறை, வீட்டு வசதி மற்றும் பெங்களூரு முன்னேற்றத் துறை, சுகாதாரம் ஆகியவை காங்கிரசுக்கு ஒதுக்கப் படவுள்ளது.




