சமூக வலைத்தளங்களில் பெண்களை இழிவாகச் சித்திரிப்போருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அச்சு ஊடகங்களில் பெண்களை அநாகரிகமாக சித்திரிப்பதைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட 1986 ஆம் ஆண்டு சட்டத்தின்படி 2 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்க முடியும்.
ஆனால் இன்றைய நாட்களில், சமூக வலைத் தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. தற்போதைய இணைய யுகத்தில் பெண்களை ஆபாசமாக சித்திரிக்கும் செயல்பாடுகளைத் தடுக்க அந்த சட்டப் பிரிவு போதுமானதாக இல்லை. இதனை மத்திய அரசு கருத்தில் கொண்டு, கடுமையான விதிமுறைகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.
இதன்படி, சமூக வலைத்தளங்களில் பெண்களை இழிவாக சித்திரிப்போருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப் படும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய , மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் இந்த சட்டத் திருத்தம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.




