கோவை – பெங்களூரு இடையே உதய் டபுள் டக்கர் (இரட்டை அடுக்கு) ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது.
கோவை – பெங்களூரு இடையே டபுள் டக்கர் ரயில் இயக்கப்படும் என கடந்த 2016-ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, உதய் டபுள் டக்கர் ரயில் என பெயரிடப்பட்ட இந்த ரயில் ஜூன் 10-ஆம் தேதி முதல் சேவையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 2 நாள் முன்னதாக இன்றே இந்த ரயில் சேவை தொடங்குகிறது.
இந்த ரயில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடியது. மேலும், இந்த ரயிலில் முதன் முதலாக உணவு வழங்கும் இயந்திர வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. 14 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலில் வைஃபை வசதி, பயோ கழிப்பறை, எல்இடி விளக்குகள் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
உதய் விரைவு ரயில் பெங்களூருவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவையை வந்தடையும். மறுமார்க்கத்தில் கோவையில் அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் ரயில், பெங்களூருவுக்கு மதியம் 12.40 மணிக்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



